Saturday, October 16, 2010

ரஜினி – சச்சின்… சில ஒற்றுமைகள்!

 ஒரு ரசிகரின் ‘டச்சிங்’ அலசல்
எதிர்ப்பார்ப்புகள், சுயநலங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதரை, கலைஞரை மக்கள் உயிருக்கு நிகராக நேசிப்பார்களா…?

இந்த கேள்விக்கான விடையை என் அனுபவத்தில் இரண்டு மாபெரும் மனிதர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

அதில் ஒன்று எனது பள்ளிப் பருவத்தில்… அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது.

இப்போது ரஜினியின் மூலமாக. சொல்லப் போனால், அரசியல்-பதவி என எதுவும் இல்லாமலேயே, ஒரு பெரிய விஷமிக் கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களையும் தாண்டி மக்களின் மனதில் ரஜினி ஆட்சி செய்வது எத்தனை பெரிய சாதனை!

ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்று கூறும் பலருடனும் பேசியதில், தெரிந்த ஒரு விஷயம், அவர்களில் பலர் நல்ல விஷயஞானமுள்ளவர்கள் என்பது. குறிப்பாக எழுதுவதில். தேர்ந்த எழுத்தாளனின் சரளத்தோடு, சுவையாக எழுதும் திறமை இவர்களில் பலருக்கும் இருக்கிறது.

கீழே நீங்கள் படிக்கவிருப்பது, நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு ரஜினி ரசிகரின் கடிதம்தான். அதாவது கடிதமென்று தனியாக எழுதப்பட்டதல்ல. இரு கட்டுரைகளுக்கு அவர் எழுதிய கமெண்டுகள்தான். அவற்றை தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள்!

-வினோ

1980 ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திலிருந்து 30 வருடங்கள் என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறார் ரஜினி.

என் வாழ்வில் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் அதிகமாக நினைவில் இருப்பவை ரஜினி சம்பந்தப்பட்டவையே. முரட்டுக்காளையிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. யாருடன் எந்தக்காட்சி என்பது உட்பட.

இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும். முரட்டுக்காளையிலிருந்து எந்திரன் வரையிலான ரஜினி படங்களின் பெயர்களை மூச்சுவிடாமல் தடுமாறாமல் என்னால் சொல்லமுடிகிறது.

இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி எந்த அளவுக்கு என்னில் ஊடுறவியுள்ளார் என்பதை நினைக்கும்போது அதுவும் சொல்லத் தோன்றவில்லை. லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்!!


என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே சூப்பர் ஸ்டார்கள்தான் ஒன்று ரஜினி… இன்னொருவர் சச்சின்.

சத்தியமாக இதை நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய.

முதல் ஒற்றுமை, துவக்க காலத்தில் இருந்தே இருவருமே தங்கள் துறையில் முடி சூடா மன்னர்களாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்களுக்கு முன் தங்கள் துறையில் உச்சத்தில் இருந்தவர்களை காப்பி அடிக்காமல் தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை உருவாக்கினர். இன்று இவர்களை பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பியடிக்கிறார்கள்.

வயது ஆக ஆக இருவரின் திறமையும்,புகழும் கூடிக்கொண்டே போகிறது. இருவருமே மற்றவர்களை விட அதிக பட்சமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்கள். அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பேச்சில் பதில் சொல்லாமல் செயலில் பதில் சொன்னவர்கள்.

ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடிப்பவர்கள். புகழின் உச்சத்தை பார்த்த பின்னரும் தன்னிலை மாறாமல் அடக்கமாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்கள் துறைகளில் தங்களுக்கும் தங்களுக்கு அடுத்து இருப்பவர்களுக்குமான இடைவெளியை மிகவும் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருப்பவர்களால் நெருங்கவே முடியாத உயரம் அது.

இருவருமே தங்கள் குடும்ப வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். இருவருமே இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் ஓய்வைப் பற்றியும் மற்றவர்கள் விவாதிக்கிறார்கள், ஆனால் இவர்களோ இன்னும் ஒரு தலைமுறையை பார்ப்பார்கள் போலிருக்கிறது!

அடுத்த சச்சின் அடுத்த ரஜினி என்று வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

பெரும்பாலான மக்களுக்கு, கிரிக்கெட்டும், சினிமாவும் விருப்பமானவை அல்ல. ஆனால் சச்சினும், ரஜினியும் விருப்பமானவர்கள். இவர்கள் எது செய்தாலும் மீடியாவுக்கு அதுதான் தலைப்புச் செய்தி.

சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும்.

அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை!

அந்நிய முதலீடு வரத்து வளர்ச்சியா? வினையா?

இந்தியாவின் பங்குச் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களால் செய்யப்படும் முதலீடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறதா அல்லது பொருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதித்து வீழ்ச்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி பொருளாதார வட்டாரங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உரையாற்றியுள்ள இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ஆர்.வி. சுப்பா ராவ், அந்நிய முதலீட்டு வரத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறுகிய கால நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைகளிலும் கடன் பத்திரங்களிலும் ஒரு அளவிற்கு அதிகமாக அந்நிய முதலீடு என்பது கவலைக்குறியது என்கிற உலகளாவிய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஒட்டியே சுப்பா ராவின் கருத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அந்நிய முதலீட்டு வரத்து ஒரே நேரத்தில் மிக அதிகமாக வருவதும், ஒரு நேரத்தில் வெளயேறுவதும் நாட்டின் பெருளாதார நிலைத்தன்மையை பாதிக்கும் என்றால், அப்போது (இந்திய மைய வங்கி) தலையிட்டே தீரும். நாங்களும் தலையிடுவோம். ஏற்றுமதி - இறக்குமதி அடிப்படையிலான நடப்பு கணக்கில் உபரி உள்ள பொருளாதார நாடுகளே தலையிடும்போது, இந்தியாவைப் போன்ற பற்றாக்குறை உள்ள நாடு தலையிடாமல் இருக்க முடியாது” என்ற பொருளில் சுப்பா ராவ் பேசியுள்ளார்.

இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) இதுவரை 22 பில்லியன் டாலர்களை (சற்றேறக்குறைய ரூ.10,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியாவின் கடன் பத்திரங்களில் 10 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இந்த அளவிற்கு இவர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யக் காரணம், தங்கள் (வளர்ந்த) நாடுகளில் வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் வட்டியை விட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யக் கூடிய முதலீடுகளில் அதிக வருவாய் கிட்டுகிறது என்பதே.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் இந்த முதலீடு பங்குச சந்தை வர்த்தகத்தை விறுவிறுப்பாக்கினாலும், அது இந்தியாவின் பெருளாதாரத்தை வேறு விதத்தில் பாதிக்கிறது. மிக அதிக அளவிற்கு வரும் முதலீடுகளால் பங்குகளின் விலையேற்றம் தாறுமாறாக உயர்கிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளின் எதிரொலியால் அவர்கள் மிகப் பெரிய அளவிற்கு பங்குகளை விற்கும்போது தாறுமாறாக சரிவையும் ஏற்படுத்துகிறது. இது பங்குச் சந்தையில் ஒரு எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்களை பாதிக்கிறது.

மற்றொரு வகையில், பெரிய அளவிற்கு டாலர் வரத்தால், அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு குறைகிறது. இது நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களை பாதிக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதிக்கு செலாவணி மாற்றில் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் ஆளாவதால், அவர்கள் வேறு நாட்டு சந்தைகளை பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இப்படி ஒரு விதத்தில் சாதகமாகத் தெரியும் அயல் நாட்டு முதலீடுகள், மற்றொரு வகையில் நாட்டின் பெருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதிக்கின்றன. இதனைத் தடுக்கவே, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்நிய முதலீடு வந்தால் அதன் மீது மூலதன வரி விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வழிமுறையை மெக்சிகோ, தென் கொரிய நாடுகள் கடைபிடிக்கின்றன.

இதைத்தான், இந்திய மைய வங்கியின் ஆளுநர் சுப்பாராவ், “நாங்களும் தலையிடுவோம” என்று கூறியுள்ளதன் பொருளாகும்.

ஆனால், சுப்பா ராவின் கருத்திற்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. வாஷிங்டனில் அந்நிய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசுகையில், “அந்நிய முதலீடுகளால் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை, இப்படிப்பட்ட காரணிகளைக் கருத்தில்கொண்டு தடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் குறுகிய காலத்தில் எதிர் வினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.

அந்நிய முதலீட்டு வருகவெள்ளத்தால் “இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஒன்றும் இப்போது இல்லை. முதலீட்டு வருகையும் வெளியேற்றமும் பெரிதாக ஏற்படவும் இல்லை. அது எங்களது சந்தை மன நிலையை பாதிக்கவும் இல்லை. எனவே அந்நிய முதலீட்டு வருகைக்கு உச்சரவரம்பு விதிக்கும் அவசியம் ஏதுமில்லை” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் சந்தைகளில் வளர்ந்த நாடுகளின் நிறுவன முதலீட்டாளர்கள் மேலும் 825 பில்லியன் கோடி (ரூ.37,12,500 கோடி) முதலீடு செய்யவுள்ளனர் என்று சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட முதலீட்டு வருகையால் ஏற்படும் பாதிப்பு என்ன? “வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாயை விட, வளரும் நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாய் அதிகம் என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கி அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவிகின்றன. இது நமது நாணய மதிப்பு மேலாக உந்தித் தள்ளுவதோடு, பெருளாதார நிலைத் தன்மையை சிக்கலாக்குகிறது. அதன் காரணமாக பணவீக்கம், வளர்ச்சி, நாணய கொள்கை ஆகியவற்றை கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று சுப்பா ராவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உருவான வீட்டுக் கடன் நிதி ஆளுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உருவான பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவும், அதனை மிகவும் சார்ந்துள்ள பொருளாதாரங்களான ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றையும் பெருமளவிற்குப் பாதித்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பெருமளவிற்கு நோட்டை அச்சடித்து சுழற்சியில் விடுகின்றன. அவைகள் முதலீடுகளாக வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கிப் பாய்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட முதலீட்டு வரவை வரவேற்கும் ஒரே நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி உள்ளார்!

அந்நிய நிறுவன முதலீடுகள் மேலும் வருவதற்கு ஏதுவாக, இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை இரு மடங்களாக உயர்த்தி 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய வழியேற்படுத்தியுள்ளார். இந்திய நாட்டின் பெரு நிறுவனங்களின் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் உச்சவரம்பை இதே அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு அந்நிய முதலீட்டை கிரகிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அதனை அனுமதிக்க வேண்டும். அந்த வரையறையை தாண்டும்போது கட்டுப்பாட்டு அவசியமானது என்று நிதி ஆலோசனை அமைப்புகள் கூறுகின்றன.

இதனையெல்லாம் உணர்ந்தவராக உள்ள மைய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கையுடன் பேசுகிறார். ஆனால், நமது நாட்டின் நிதியமைச்சரோ, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய முதலீடுகளால் மட்டுமே சாத்தியமாகும் என்பதுபோல் பேசி வருகிறார்.

அமெரிக்காவீன் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லீமென் பிரதர்ஸ் சரிந்து விழுந்ததையடுத்து உருவான சங்கிலித் தொடர் வினைகளால் அந்நாட்டு பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு பெரும் ‘மாற்றம்’ நிகழ்ந்தால் மட்டுமே நமது நாட்டு அரசும் விழித்துக்கொள்ளுமோ என்னவோ?

Friday, October 15, 2010

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

எண்பதுகளில், கபில்தேவ் சகாப்தத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்த பலரும், இன்று கிரிக்கெட் என்றாலே வெறுப்புடன் பார்க்கும் நிலை. எங்கும் சூதாட்டம், வீரர்களின் பண வெறி, கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கபிலுக்கு நிகரான இயல்புகளுடன் கூடிய கிரிக்கெட் வீரர்கள் இல்லாமல் போனது முக்கிய காரணம்.

அன்றைக்கு இந்திய அணியின் ஸ்கோர் என்னவென்று கேட்கும்போதே, “கபில் இருக்காரா.. அவுட்டா?” என்று கூடவே ஒரு துணைக் கேள்வியும் கிளம்பியதைப் பாரப்த்திருப்பீர்கள். இன்றும் அந்தக் கேள்வி தொடர்கிறது, ‘சச்சின் ஆடறாரா?’.

கபில், அமர்நாத், பின்னி காலத்து ரசிகர்களுக்கு இன்று பெரும் ஆறுதலாக இருக்கும் ஒரே வீரர், சச்சின் டெண்டுல்கர்தான் என்றால் மிகையல்ல. ‘இது தனிமனித துதிதானே… குழு விளையாட்டான கிரிக்கெட்டில் இது ஆபத்தல்லவா?’ என்று கேட்கலாம்.

இதற்கான காரணத்தை ஆராயப்போனால், அது இந்திய அணியின் தேர்வு முறை, எப்போதும் தனியொரு வீரரே அணியின் வெற்றியை தோளில் சுமப்பது என வேறு திக்கில் போகும். இப்போதைக்கு அது வேண்டாம்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பெங்களூரில் புதன்கிழமை முடிந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் ஆடிய ஆட்டம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசிகர்களை உள்ளம் குளிர வைத்தது.

முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக இரட்டை சதமடித்த டெண்டுல்கர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டின்றி 53 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக நின்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் புரட்டி எடுக்க டெண்டுல்கர் பெரும் உதவி் புரிந்தார். இந்திய பந்துவீச்சாளர்களும் சோடை போகவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூர் டெஸ்டில் ஜாஹீர் கானின் பந்துவீச்சு ரோஜர் பின்னியின் மாயாஜால மீடியம் பேஸை நினைவூட்டியது.

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்… டெண்டுல்கரிடம் மட்டும் என்ன சிறப்பு?

கிரிக்கெட்டை ஜென்டில்மென் விளையாட்டு என்பார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர்கள் கபில்தேவ், மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ்… இப்போது சச்சின் டெண்டுல்கர்.

மைதானத்தில் சிறப்பாக ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் அல்லது அவரது சீனியர் ஸ்டீவ் வாஹ் அல்லது அவருக்கும் முந்தைய ஆலன் பார்டர் போன்றோர் புரிந்த சாதனைகள் நினைவுக்கு வருவதில்லை. அவர்களின் அழுகுணித்தனங்கள்தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். பாகிஸ்தான் வீரர்கள் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை விட பலமடங்கு மோசமானவர்கள்.

ஆனால் கபில்தேவை நினைத்தால் அவரது சிரித்த முகமும், மைதானத்தில் எதிரணி வீரர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு விளையாட்டை விளையாட்டாய் நேசிக்கும் மனப்பாங்கும் நமது மனக்கண்ணில் மின்னும்.


ஹைதராபாதில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை. வழக்கம்போல கபில்தான் கடைசி ஓவர் வீசினார். முதல் விக்கெட் விழுந்துவிட்டது. அடுத்த இரு பந்துகளில் 4 ரன்கள் கொடுத்தார். இன்னும் 5 ரன்கள் எடுத்தால் மேற்கிந்திய தீவு வென்றுவிடும் நிலை. கபில் பந்து வீசும் முனையில் வில்லியம்ஸ் என்ற விக்கெட் கீப்பர் ஆடிக்கொண்டிருந்தார். நான்காவது பந்தைப் போடும் முன் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு பேசிய கபில், சிரித்தபடி ஸ்டம்புகளைக் காட்டி ‘பேக்அப்’ என்று கூறிவிட்டு, மீண்டும் பந்து வீச ஓடி வந்தார்.

அவர் சொன்னதுபோலவே, எதிர்முனையில் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது கபில் பந்து. இந்தியா வென்றது. உடனே வில்லியம்ஸ் கபிலை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் (தம்ஸ்அப்) காட்டி சிரிக்க, அவரை கபில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த மாதிரி ஒரு ஸ்போர்டிவான முடிவை எந்த கிரிக்கெட் போட்டியிலாவது சமீப நாட்களில் பார்த்திருப்பீர்களா…

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், பந்தை அடிக்காமலேயே ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடி வந்தார் அபுதுல் காதர். க்ரீஸை விட்டு சிறிது தூரம் வந்துவிட்டார். விதிப்படி அது தவறுதான். அப்போது பந்து கர்ட்னி வால்ஷ் கையில் இருந்தது. ஆனால் அவர் ஸ்டம்பை நோக்கி வீசாமல், காதரை எச்சரித்தார். அவரும் உடனே க்ரீஸுக்குள்ளே போய் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். அதன் பிறகு போர், சிக்ஸர் என வெளுத்தார். விளைவு, போட்டியிலிருந்தே மேற்கிந்தியத் தீவு வெளியேறியது. இருந்தாலும் பாகிஸ்தானின் வெற்றியைவிட, வால்ஷின் அந்த பெருந்தன்மை பெரிதும் பேசப்பட்டது.

இவர்கள் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டிய அதிசயமான வீரர்தான் சச்சின் டெண்டுல்கரும்.

மைதானத்தில் கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, எதிரணி வீரர்களிடம் மல்லுக்கு நிற்பது, அம்பயரை முறைப்பது என எதிலும் இறங்காதவர் சச்சின். எந்த நாட்டு கிரிக்கெட் வீரரும், சச்சினை மட்டும் மிக நாகரீகமான, பண்புள்ள வீரர் என்று பாராட்டுவதைக் கேட்கலாம். இன்று, ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறார் சச்சின்.

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள சர்வே முடிவில் 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் சச்சினை சிறந்த வீரராகக் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘இந்தியாவின் விலை மதிப்பில்லா விளையாட்டு வைரம் சச்சின் டெண்டுல்கர்’ என்று பெருமைப்படுத்தியுள்ளது அந்தப் பத்திரிகை.

உலகில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாடுகளிலும் சச்சின் ஒரு மரியாதைக்குரிய வீரராகவே பார்க்கப்படுகிறார்.

சச்சின் தன் சொந்த சாதனைகளுக்காகவும் பணத்துக்காகவும் ஆடுவதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதில் சற்றும் உண்மையில்லை என்பது அவர் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.


“கிரிக்கெட்டில் நான் அதிக முக்கியத்துவம் தருவது ஒரேயொரு விஷயத்துக்குத்தான்… அது நேர்மை. இந்த விளையாட்டை நேர்மையான முறையில், சுத்தமாக ஆட வேண்டும். பணம் பெரிதல்ல. அதுதான் இருபதாண்டுகள் கடந்தும் இன்னும் இந்த விளையாட்டில் என்னை இருக்க வைக்கிறது” என்கிறார் சச்சின்.

“கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த பிறகு பணத்தைப் பற்றியோ, எனது தனிப்பட்ட சாதனைகள் குறித்தோ நான் யோசிப்பது கூட கிடையாது. அதிக பணம், குறைந்த ரன்கள் என்ற கேவலமான நினைப்பு என் மனதிலிருந்திருந்தால் என்னால் தூங்கமுடியாமலே போயிருக்கும்” என்ற அவரது வார்த்தைகளில் எந்த பாசாங்கையும் காண முடியாது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ள சச்சின், இந்திய அணிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஒரு விலை மதிப்பற்ற கோஹினூராய் ஜொலிக்கிறார்!

இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஒரேயொரு விண்ணப்பம்… கபிலுக்கு செய்தது போல, ‘எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை சச்சினிடமும் கேட்குமாறு மீடியாவைத் தூண்டிவிடாதீர்கள்..!