Saturday, January 7, 2012

எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த 'சி' முக்கியம்!

Orange

ஓடியாடி அலையும் உடலுக்கு சத்தான உணவுகள் அவசியம். அந்த உணவுகளில் இயற்கையாகவே எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன. உடலின் வளர்ச்சிக்கும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் அவசியம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது உணவியல் வல்லுநர்கள் கூறிய அறிவுரையை தெரிந்து கொள்வோம்.

கண்பார்வை தரும் ‘ஏ’

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இதய பாதிப்பை நீக்கும் ‘பி’

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி’ குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

மன அமைதி தரும் ‘ சி ‘

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.

வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

எலும்புகளுக்கு பலம் தரும் ‘டி’

வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

மலட்டு தன்மையை நீக்கும்

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும்.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து வைட்டமின்களும் தேவை எனவே, ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் என்பதே உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Thursday, January 5, 2012

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Husband and Wife

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

மனைவிக்கு பிறந்தநாள் வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தனது வாழ்க்கை துணைக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிடுவார்கள்.

என்ன பரிசு கொடுக்கலாம், மனைவியை எப்படி குஷிப்படுத்தலாம் என்பது குறித்து சில டிப்ஸ்கள்...

1. மனைவிக்கு பிடித்த கலரில் புடவை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்.

2. கொஞ்சம் டப்பு உள்ள ஆளா நீங்கள். தங்கம் அல்லது வைர நகையை பரிசளிக்கலாம்.

3. நள்ளிரவு 12 மணிக்கு சர்பிரைஸாக கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.

4. அன்றைய நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு மனைவியுடன் வெளியே சென்று வரலாம்.

5. பிறந்நாளன்று மனைவிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து ஊட்டிவிடலாம். (சாப்பிடற மாதிரி இருந்தா...)?

6. உங்கள் மனைவிக்கு வெளியே போக மனமில்லை என்றால் நீங்கள் இருவரமாக வீட்டில் இருந்து பழைய நினைவுகளை அசைபோடலாம். முக்கிய குறிப்பு: இனிய அனுபவங்களை மட்டும் அசைபோடுங்கள்.

7. அன்றைய நாள் முழுவதும் உங்கள் அரவணைப்பில் வாழ்க்கைத் துணை திளைக்கட்டும்.

8. நீ தான் சிறந்த மனைவி என்று ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

9. நீங்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை, நெற்றியில் பாசத்துடன் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அதுவே பெரிய பரிசாகும்.

10. மல்லிகைக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. உங்கள் கையால் மல்லிகைப் பூ வாங்கி அதை அவர் தலையில் வைத்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்பின் மிகுதியை.

மேற்கூறியவை சின்னச் சின்ன ஆலோசனை தான். நீங்கதான் பெரிய புத்திசாலியாச்சே, இதை விட சிறப்பாக கூட உங்களுக்குத் தோணலாம். பிறகென்ன அதையும் செய்து பாருங்க..

Wednesday, January 4, 2012

மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் – ஆய்வில் தகவல்



Pomogranate

மார்பகப்புற்றுநோய் தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் "கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்" பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது எண்ணற்ற பெண்களின் மனதில் பாலை வார்த்திருக்கிறது.

மார்பகப்புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயும் பெண்கள் அதிகம் அச்சப்படும் விசயமாகும். பெண்களின் உடலில் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களின் மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதான அமிலம்

மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பைட்டோகெமிக்கலானது ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது" என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் செல்கள்


மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் உள்ள எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இந்த அமிலம் புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தியாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர், மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம் எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது என தெரிவித்துள்ளார்.