Monday, June 9, 2014

நீல நட்சத்திர நாளில் என்ன நடந்தது?

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மேற்கொள்ளப்பட்டு 30 ஆண்டுகளானாலும் வடுக்கள் இன்னும் மறையவில்லை
சீக்கியர்களுக்காக ‘காலிஸ்தான்' என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற ராணுவம் எடுத்த நடவடிக்கையின் சங்கேதப் பெயர் 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்'.
அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பரந்து விரிந்த ஒரு வழிபாட்டுத் தலம். அந்தக் கோயில் வளாகத்துக்குப் பெயர் ஹர்மந்தர் சாஹிப். சீக்கியர்களின் புனித நூல்தான் குருநாதராகப் பாவிக்கப்பட்டு அன்றாடம் ஓதப்படுகிறது. அந்த இடத்துக்கு வரும் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடியும் புனித நூலில் உள்ள வசனங்களை ஓதியும் வழிபடுவார்கள். அன்றாடம் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படும் இடம் இது.
அந்த நாள்…
இந்தப் பொற்கோயிலுக்குள்தான் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து பஞ்சாப் அரசும் மத்திய அரசும் விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் முழுக்கப் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசிடம் ஒப்புதல் பெறாமல் எந்தத் தகவலையும் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்குச் செய்தித் தணிக்கை கடுமையாக அமல்செய்யப்பட்டது. அமிர்தசரஸ் நகரிலிருந்து பத்திரிகை நிருபர்கள் அகற்றப்பட்டனர். எல்லைகளில் வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டன. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் குடிநீர் விநியோகம்கூட நின்றது.
பஞ்சாப் மாநில போலீஸார், மத்திய போலீஸ் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படை, கமாண்டோ படையினர், ராணுவம் என்று அனைத்துத் தரப்பினரும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பங்கேற்றனர். தரைப்படையின் காலாட்படை, கவச வாகனப்படை இரண்டும் களத்தில் இறக்கப்பட்டன. ராணுவ டேங்குகளும், ஹெலிகாப்டர்களும்கூட பயன்படுத்தப்பட்டன. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் ‘ஆபரேஷன் மெட்டல்', ‘ஆபரேஷன் ஷாப்' என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.
‘ஆபரேஷன் மெட்டல்' என்பது பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்தர் சாஹிபுக்கானது. ‘ஆபரேஷன் ஷாப்' என்பது பஞ்சாபின் பிற பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் கண்டுபிடித்துக் கைதுசெய்வது அல்லது அழிப்பதற்கானது. இதற்குப் பிறகு ‘ஆபரேஷன் உட் ரோஸ்' (வன ரோஜா) என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது மாநிலம் முழுக்க அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தி, பயங்கரவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்வது.
சின்ஹாவின் யோசனை புறக்கணிப்பு
பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற வேண்டும், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று பிரதமர் இந்திரா காந்தி லெப். ஜெனரல் இந்தியத் தரைப்படையின் துணைத் தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே. சின்ஹாவைத்தான் முதலில் கேட்டார். சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினால், அதை சீக்கியர்கள் காலம் முழுக்க மறக்க மாட்டார்கள், வேறு வழியில் இதை முயற்சி செய்துபார்க்கலாம் என்றார். இந்திரா அவருடைய யோசனையை நிராகரித்தார்.
அதன் பிறகு, ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்யா தரைப்படைத் தலைமை தளபதியாக்கப்பட்டார். அவர் லெப். ஜெனரல் கே. சுந்தர்ஜி உதவியுடன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை வகுத்தார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 1984 ஜூன் 1 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்டது. 5 தரைப் படைப் பிரிவுகள், 2 கமாண்டோ படைப் பிரிவுகள், 6 டேங்குகள், 2 துணைநிலை ராணுவப் படைப் பிரிவுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவப் படைக்கு மேஜர் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையேற்றார். பிஹார் ரெஜிமெண்ட், மெட்ராஸ் ரெஜிமெண்ட், 10-கார்ட்ஸ் ரெஜிமெண்ட் ஆகியவை பங்கேற்றன.
முதல் இலக்கு
ஜூன் முதல் நாள், ‘குரு ராம்தாஸ் லங்கர்' என்றழைக்கப்படும் யாத்ரிகர்களுக்கான உணவுக் கூடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கினர். அதில் 8 முதல் 10 பேர் வரை இறந்தனர்.
ஜூன் 2-ம் நாள் காஷ்மீர் முதல் ராஜஸ்தானின் கங்கா நகர் வரையிலான சர்வதேச நில எல்லைகள் மூடப்பட்டன. பஞ்சாப் கிராமங்களுக்கு ராணுவத்தின் 7 டிவிஷன் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. வெளிநாட்டவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பஞ்சாப் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர். பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகராக ஜெனரல் கௌரி சங்கர் நியமிக்கப்பட்டார்.
ஜூன் 3-ம் நாள் பஞ்சாப் முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ராணுவமும் துணைநிலை ராணுவமும் ரோந்து சுற்றியது. பொற்கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாமலும் வெளியேற முடியாமலும் காவல், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜூன் 4-ம் நாள், ராம்கடியா பங்காஸ், தண்ணீர்த் தொட்டி போன்றவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. பீரங்கி மூலம், பயங்கரவாதிகளின் வெளிப்புறத் தடுப்பரண்கள் துவம்சம் செய்யப்பட்டன. சுமார் 100 பேர் இறந்தனர். சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் முன்னாள் தலைவர் குருசரண் சிங் தோராவை, பயங்கரவாதிகளுடன் பேசச் சொல்லி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளைக் கைவிட்டு சரண் அடைய மறுத்துவிட்டனர். பேச்சு தோல்வியில் முடிந்தது.
ஜூன் 5-ம் நாள், ஆலய வளாகத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த ஹோட்டல் டெம்பிள் வியூ என்ற கட்டடமும் பிரம்மபூத அகடாவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. ராணுவத்தின் 9-வது படைப் பிரிவு, அகால்தக்த் என்ற பகுதிமீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராணுவத் தரப்பில் மிகக் கடுமையான ஆள்சேதம் ஏற்பட்டது. வெறும் துப்பாக்கிகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பயன்தராது என்ற நிலைக்குப் பிறகே டேங்குகள் மூலம் பெரும் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டது.
ஜூன் 6-ம் நாள் விஜயந்தா டேங்குகள் அகால்தக்தை நிர்மூலம் செய்தன. அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சிறு கும்பல், ராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியானது. அப்படியும் அகால்தக்தின் பக்கத்துக் கட்டடங்களிலிருந்து பயங்கரவாதிகள் தாக்கினர். ராணுவத்தின் தாக்குதலில் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.
ஜூன் 7-ம் நாள் ஹர்மந்தர் சாஹிப், ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
ஜூன் 8 முதல் 10 வரையில் ஒரு கோபுரத்தின் அடித்தளத்தில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். அந்த இடத்தை நோக்கி விரைந்த கமாண்டோ படை கர்னல் ஒருவரைப் பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டு அவரது உடலைச் சல்லடைக் கண்களைப் போலத் துளைத்தனர். ஜூன் 10-ந் தேதி பிற்பகல்தான் ஆலயம் முழுக்கப் பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது.
பலி எத்தனை?
ராணுவத் தரப்பில் 136 பேர் உயிரிழந்தனர், 220 பேர் காயமடைந்தனர். சிவிலியன்கள் தரப்பில் 492 பேர் இறந்தனர். இவர்களில் பயங்கரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் இருந்தனர். ராணுவ நடவடிக்கையில் 5,000 பேர் இறந்தனர் என்றும் பஞ்சாப் முழுக்க 20,000 பேர் இறந்தனர் என்றும் எந்தவித ஆதாரங்களுமின்றிப் பல தகவல்கள் உலவுகின்றன. பொற்கோயில் நடவடிக்கையில் ராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை இழந்ததாகப் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்.
சீக்கியர்கள் கலகம்
பொற்கோயிலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, சீக்கியர்கள் மனதில் அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. ராணுவத்திலேயே சில படைப் பிரிவுகளில் சீக்கிய வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். ராணுவத்திலும் போலீஸ் படையிலும் பணிபுரிந்த பலர் பதவிகளை விட்டு விலகினர். இந்திய அரசு அளித்திருந்த பதக்கங்களையும் பட்டங்களையும் துறந்தனர்.
இந்திரா காந்தி படுகொலை
பொற்கோயிலுக்குள் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களில் சிலர் இந்திரா காந்தியின் மெய்க்காவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பேயந்த் சிங் என்ற இருவரை அணுகி இதற்குப் பழிவாங்க இந்திராவைக் கொல்ல வேண்டும் என்று அவர்களைத் தூண்டினார்கள். இதையடுத்து, இந்திரா காந்தியை அவர்கள் அவருடைய அரசு இல்லத்திலேயே அவர் நடந்துசெல்லும்போது, 1984 அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொன்றனர். இந்திரா காந்தியின் உடலை 33 குண்டுகள் துளைத்தன.
சீக்கியர்கள் படுகொலை
இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு அதற்குப் பழிவாங்கும் வகையில், டெல்லியிலும் வேறு சில ஊர்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன. 3,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் இதில் இறந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கையும் இறுதியானதோ சரியானதோ அல்ல என்றே பலர் கூறுகின்றனர். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்கள் மீது இன்னமும் வழக்கு நடந்துவருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சீக்கியர் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து அந்தச் சமூகத்தினரிடம் மத்திய அரசின் சார்பில் மன்னிப்பு கோரியது நினைவுகூரத் தக்கது.
ஆண்டுகள் 30 ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக வடுக்களில் ஊற்றெடுக்கும் ரத்தமாகவே இருக்கிறது நீல நட்சத்திர நடவடிக்கை.

காலிஸ்தான் இயக்கம்

நடுவில் இருப்பவர்தான் பிந்தரன்வாலே
காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கியர்களுக்கு என்று தனி நாடு கோரும் அரசியல் இயக்கம். பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் பாயும் புனிதப் பிரதேசம் என்று பொருள். பஞ்சாப்தான் பாரம்பரியமாகவே சீக்கியர்களின் தாயகமாக இருந்துவந்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றுவதற்கு முன்னால் பஞ்சாப் பிரதேசத்தை சீக்கியர்களே தொடர்ந்து 82 ஆண்டுகள் ஆண்டுவந்தனர்.
மகாராஜா ரஞ்சித் சிங் சீக்கியர்களுடைய பகுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆட்சி செய்துவந்தார். அதே சமயம் சீக்கியர்களுடைய பிரதேசத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ்ந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் லூதியானா மாவட்டத்தில் சீக்கியர்கள்தான் அதிகம் வசித்தனர். 1940-ல் பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி லாகூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி நாடு கேட்டு பெற்றுவிடுவார்கள். இந்துக்களுக்கு இந்துஸ்தானம் இருக்கும். நமக்குத்தான் தனி நாடு இல்லாமல் போய்விடும் என்று நினைத்த சீக்கியர்கள், காலிஸ்தான் என்ற தனி நாடு கோரினார்கள். இந்தியாவில் உள்ள பஞ்சாபையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபையும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து காலிஸ்தான் அமைக்க வேண்டும் என்று கோரினர்.
பஞ்சாபி சுபா
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானில் வசித்த சீக்கியர்களும் இந்தியா வந்தனர். அவர்கள் பஞ்சாப் தவிர இமாசலப் பிரதேசம், ஹரியானா ஆகியவற்றிலும் குடியேறினர். அகாலி தள இயக்கம் ‘பஞ்சாபி சுபா' என்ற கோரிக்கையை முன்வைத்தது. பஞ்சாபியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இணைத்து தனி பிரதேசம் வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இந்திய அரசு தொடக்கத்தில் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
சீக்கியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரித்துவந்தாலும் 1965-ல் பாகிஸ்தானுடனான யுத்தத்துக்குப் பிறகு சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இணைத்துத் தனி பஞ்சாப் மாநிலத்தை ஏற்படுத்தியது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஹரியானா, இமாசலப் பிரதேசம் என்று பிரிக்கப்பட்டது.
ஆனால், இது சீக்கியர்களைத் திருப்திப்படுத்தவில்லை. மத்திய அரசு மாநிலத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரிக்கிறது, பஞ்சாபின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, சீக்கியர்களின் மொழி, கலாச்சாரம் பாதுகாக்கப்பட இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தனி நாடு கோரிக்கையை அகாலி தளக் கட்சி ஏற்காவிட்டாலும் சீக்கியர்களின் இதர கோரிக்கைகளை ஆதரித்தது.
ஜகஜீத் சிங் சௌஹான்:
1971-ல் ஜகஜீத் சிங் சௌஹான் அமெரிக்கா சென்று தனி காலிஸ்தான் நிறுவப்போவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விளம்பரமே கொடுத்தார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் உடனே கோடிக்கணக்கான ரூபாய்களை அவருக்கு அனுப்பினர். 1980 ஏப்ரல் 12-ல் அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து காலிஸ்தான் தனி நாடு ஏற்பட வேண்டியதுகுறித்துப் பேசினார்.
பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் என்ற ஊரில் காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பை அதற்கு முன்னதாக அவர் ஏற்படுத்தியிருந்தார். அந்த அமைப்பின் தலைவராகத் தன்னையும் பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சாந்து என்பவரையும் அறிவித்துக்கொண்டார். பிறகு, லண்டன் சென்று காலிஸ்தானை அமைத்துவிட்டதாகவே அறிவித்தார். அதே வேளையில் அமிர்தசரஸ் நகரிலிருந்து பல்பீர் சிங் சாந்துவும் அதே அறிவிப்பை வெளியிட்டார்.
காலிஸ்தான் என்ற தனி நாட்டுக்கான அஞ்சல் தலைகளையும் செலாவணிகளையும்கூட அவர் வெளியிட்டார். இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் அகாலி தளத் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால் கடுமையாகக் கண்டித்தார். இவையெல்லாம் காங்கிரஸ் தூண்டுதலில் நடைபெறும் நாடகம் என்றார்.
காலிஸ்தான் இயக்கம் இப்படி நியாயமாகத் தொடங்கினாலும் பிறகு விளையாட்டாகப் பரவத் தொடங்கியது. 1970-களிலும் 1980-களிலும் உச்சத்துக்குச் சென்றது. காலிஸ்தான் வேண்டும் என்று ஒன்றல்ல, பல்வேறு இயக்கங்கள் சிறிதும் பெரியதுமாகத் தோன்றத் தொடங்கின. அரசியல்ரீதியாக அகாலி தளத்தைப் பலவீனப்படுத்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்பவரை பிரதமர் இந்திரா காந்தி ஊக்குவித்தார் என்றும் சொல்வார்கள். அவர்தான் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் ஆயுதம் தாங்கிய தனது ஆதரவாளர்களுடன் புகுந்துகொண்டு அதைக் கைப்பற்றினார்.
அரசியல் ரீதியாகவும் வேறு காரணங்களுக்காகவும் தன்னைப் பகைத்தவர்களைக் கொல்லத் தொடங்கினார். இந்துக்களை மட்டுமல்லாமல் சீக்கியர்களையும் கொல்ல அவர் தயங்கவில்லை. அவருடைய மார்க்கப்பற்று, தனி நாடு அடைந்துவிடுவோம் என்ற லட்சிய வெறி ஏராளமான சீக்கியர்களை அவர்பால் ஈர்த்தது. இப்படித்தான் அவர் காலிஸ்தான் தீவிரவாதியாக மாறி பிறகு பயங்கரவாதியாகவே ஆகிவிட்டார்.
பழிவாங்கிய ஷபக் சிங்
வங்கதேசப் போரில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசால் கௌரவிக்கப்பட்ட ஷபக் சிங், ஊழல் குற்றச்சாட்டு காரணமாகப் படையிலிருந்து விலக்கப்பட்டார். அதைப் பெரிய அவமானமாகக் கருதிய அவர் அதற்குப் பழிவாங்கும் விதத்தில் பிந்தரன்வாலேயுடன் சேர்ந்துகொண்டு போர்ப் பயிற்சி அளித்தார்.
தியாகியான பயங்கரவாதி
ஆயுதம் ஏந்திய 600 ஆதரவாளர்களுடன் 1982-ல் பிந்தரன்வாலே பொற்கோவிலுக்குள் புகுந்தார். அன்று முதல் அவர் செல்வாக்கு உலகம் முழுக்க வளரத் தொடங்கியது. ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது அவர் கொல்லப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் அவரை இன்றும் தியாகி என்றே அழைக்கின்றனர்.

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா?
அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணமானோம். அதே பெட்டியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களால் பிரச்சினையில்லை.
ஆனால், அவர்களுடன் வந்த சுமார் ஒரு டஜன் தொண்டர்கள் பதிவுசெய்யாத பயணிகள். அவர்கள் அடித்த லூட்டி பயங்கரமாக இருந்தது. அவர்கள் எங்களைப் பதிவுசெய்த இருக்கையிலிருந்து நகர்த்தி னார்கள். நாங்கள் கொண்டுபோயிருந்த பெட்டிகள் மீது உட்கார்ந்துகொண்டார்கள். அசிங்கம் அசிங்கமாகப் பேசினார்கள். ஆபாசமாக ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
பயங்கரமான இரவு
நாங்கள் ரொம்பவும் பயந்துபோனோம். கூச்சத்தில் நெளிந்தோம். அடங்காப்பிடாரிகளுடன் அது ஒரு பயங்கரமான இரவு நேர ரயில் பயணம். மறுநாள் காலை ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடியே டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினோம். அரண்டுபோன என் தோழி அடுத்தகட்டப் பயிற்சிக்காக அகமதாபாத் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்து டெல்லியிலேயே தங்கிவிட்டார்.
என்னுடன் சேர்ந்து ரயில்வே பணிக்குத் தேர்வான உத்பல்பர்னா ஹஸரிகா என்ற பெண்ணுடன் டெல்லி யிலிருந்து அகமதாபாத்துக்குப் புறப்பட்டேன் (உத்பல்பர்னா இப்போது ரயில்வே வாரியச் செயல் இயக்குநர்). இந்தமுறை பதிவுசெய்த டிக்கெட்டைப் பெற எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ‘வெயிட்டிங் லிஸ்ட்’ பயணிகளாக அகமதாபாத் செல்லும் இரவு நேர ரயிலில் ஏறினோம்.
டிக்கெட் பரிசோதகரிடம் எங்கள் நிலையைச் சொன்னதும் அவர் எங்களை முதல் வகுப்பு கூபேயில் உட்கார்த்திவைத்தார். இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கூண்டு அது. ஒரு கீழ் பெர்த், ஒரு மேல் பெர்த். ஏற்கெனவே இரண்டு நபர்கள் கீழ் பெர்த்தில் இருந்தார்கள். வெள்ளைக் கதர் ஆடையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் அரசியல்வாதிகள் என்பது தெரிந்தது. நான் திடுக்கிட்டேன். என் தயக்கத்தைப் புரிந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர் “கவலைப்பட வேண்டாம். இவர்கள் வழக்கமாக வரும் பயணிகள். மிகவும் நல்லவர்கள். பயம் வேண்டாம்” என்று ஆறுத லாகச் சொன்னார்.
இனிய இரவு
ஒருவருக்கு 45 வயது இருக்கும். முகத்தில் பாசம் தெரிந்தது. மற்றவருக்கு 35 வயதுக்கு மேலிருக் கலாம். அவர் அதிகம் பேசவில்லை. சலனம் இல்லாதவராக இருந்தார். இருவரும் பெர்த்தின் ஓரமாக நகர்ந்துகொண்டு எங்களுக்கு உட்கார இடம் கொடுத்தார்கள். தங்களை குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பெயர் களையும் சொன்னார்கள். பெயர்கள் அப்போது மனதில் பதியவில்லை. நாங்களும் எங்களை அசாம் மாநிலத்தவர்கள், ரயில்வே அதிகாரிகள் பணிக்குப் பயிற்சி பெறுபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
ஏதேதோ பேசிக்கொண்டு வந்தோம். பேச்சு வரலாறு மற்றும் அரசியல் பக்கம் திரும்பியது. இந்து மகாசபா முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட காலகட்டத்தைத் தொட்டுச் சென்றது. உடன்வந்த தோழி டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டதாரி. நானும் இடையிடையே ஏதோ பேசினேன். மூத்த அரசியல்வாதி உற்சாகமாகப் பேச்சில் கலந்துகொண்டார். இளையவர் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பேசாவிட்டாலும் எல்லா வற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது அவரது முகபாவத்தைப் பார்த்ததும் தெரிந்தது.
பேச்சுவாக்கில் ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியின் மறைவு பற்றிக் குறிப்பிட்டு இன்றுவரை அவர் மரணத்தின் மர்மம் விலகவில்லையே என்று சொன்னேன். அப்போது அந்த இளம் அரசியல்வாதி ஆர்வத்துடன் கேட்டார் “ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியை உங்களுக்கு எப்படித் தெரியும்?” நான் சொன்னேன். “அவர் கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது என் தந்தை அங்கே மாணவர்.”
இதைக்கேட்ட இளம் அரசியல்வாதி தன்னையறியாமல் தனக்கு மட்டும் கேட்கிறாற்போல் மெலிதான குரலில் சொல்லிக்கொண்டார், “பரவாயில்லை, இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது.”
அப்போது மூத்த அரசியல்வாதி “நீங்கள் குஜராத் மாநில பா.ஜ.க-வில் சேரக் கூடதா?” என்று கேட்டார். சிரித்து மழுப்பினோம். நாங்கள் குஜராத் மாநிலத்தவர் இல்லையே என்றும் சொன்னோம். அப்போது அந்த இளம் அரசியல்வாதி “அதனாலென்ன? எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. நாங்கள் திறமைசாலிகளை வரவேற்கிறோம்” என்று அமைதியாக, நிதானமாக, திடமாகச் சொன்னார்.
கண்களில் ஒளி
அப்போது நால்வருக்கும் சைவச் சாப்பாடு வந்தது. பேசாமலேயே சாப்பிட்டோம். ரயில் ஊழியர் வந்தபோது, அந்த இளம் அரசியல்வாதி நான்கு பேர்களுக்குமான பணத்தைக் கொடுத்தார். மெலிதான குரலில் நான் நன்றி என்று சொன்னபோது அதை அவர் பொருட்படுத்தவில்லை. தான் உணவுக்குப் பணம் கொடுத்தது, நான் நன்றி சொன்னது இரண்டையுமே அவர் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
அப்போதுதான் அவரை உற்றுப் பார்த்தேன், அவர் கண்களில் ஒருவித ஒளி தெரிந்தது. யாரும் அதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அவர் அரிதாகவே பேசினார். ஆனால், பிறர் பேசியதையெல்லாம் முழுமையாக, பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அந்த நேரம் வந்த டிக்கெட் பரிசோதகர், ரயிலில் காலி பெர்த்கள் எதுவுமில்லை என்றும் தன்னால் உதவ முடியவில்லை என்றும் சொன்னார். அப்போது அந்த இரு அரசியல்வாதிகளும் “பரவாயில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டார்கள். உடனே, அவர்கள் இருவரும் கீழ் பெர்த்தையும் மேல் பெர்த்தையும் எங்களுக்குத் தந்துவிட்டு கீழே துணியை விரித்துப் படுத்துக்கொண்டார்கள்.
முதல் நாள் இரவுக்கும் மறுநாள் இரவுக்கும் என்ன வித்தியாசம். காலையில் ரயில் அகமதாபாதை நெருங்கியபோது, அந்த இருவரும் நாங்கள் எங்கே தங்கப்போகிறோம் என்று கேட்டார்கள். “வெளியில் தங்குவதற்கு உங்களுக்குப் பிரச்சினை ஏதுமிருந்தால் தயங்காமல் என் வீட்டுக்கு வாருங்கள். எப்போதும் என் வீட்டுக் கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்” என்றார் மூத்தவர்.
அதில் நிஜமான அக்கறை வெளிப்பட்டது. அப்போது இளைய அரசியல்வாதி ‘‘நான் ஒரு நாடோடி. எனக்கு வீடு வாசல் கிடையாது. அவரைப் போல் நான் உங்களை விருந்தாளிகளாக அழைக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர் சொல்வதைக் கேட்கலாம். இந்தப் புதிய ஊரில் அவர் வீட்டில் தங்குவது பத்திர மானதுதான்” என்றார்.
இருவருக்கும் நன்றி சொன்னோம். தங்குவது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று சொன்னோம். ரயில் நிற்பதற்கு முன்பு நான் என் டயரியை எடுத்தேன். “மீண்டும் பெயர்களைச் சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறோம்” என்றேன். ஏனென்றால், இந்த இருவரும் அரசியல்வாதிகள் பற்றி நான் கொண்டிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிவிட்டார்கள்.
அந்த இரண்டு இரவு ரயில் பயணத்தைப் பற்றி 1995-ல் ஒரு அசாமிய பத்திரிகையில் எழுதினேன். இரண்டு அசாமிய சகோதரிகளுக்காகத் தரையில் படுத்துத் தூங்கிய அந்த குஜராத் அரசியல்வாதிகளைப் பாராட்டியிருந்தேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, இரண்டு அரசியல்வாதிகளுமே பிரபலமானார்கள். மூத்தவர் 1996-ல் குஜராத் முதல்வர் ஆனார். இளையவர் 2001-ல் குஜராத் முதல்வர் ஆனார். இந்தத் தகவல் அறிந்து ஆனந்தப்பட்டேன். இதையடுத்து இன்னொரு அசாமியப் பத்திரிகை நான் 1995-ல் எழுதிய கட்டுரையை மறுபிரசுரம் செய்தது. அவர்களுடைய பெயர்களை நான் இன்னும் சொல்லவில்லையே? அந்த மூத்த அரசியல்வாதி சங்கர்சிங் வகேலா, இளையவர் நரேந்திர மோடி.

Tuesday, May 27, 2014

நேருவைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்

நேரு பற்றி நம்மிடையே உலவும் நம்பிக்கைகள் எந்தளவுக்கு உண்மையானவை
ஜவாஹர்லால் நேருவின் நினைவு வாரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி இதுவரை உருவாகியிருக்கும் கட்டுக் கதைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: வாரிசு அரசியலை நேரு ஊக்குவித்தார்
நேருவின் மகள், பேரன் ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த காரணத்தாலும் அவருடைய பேரனின் மனைவி அந்தப் பதவியை அடைவார் என்ற நிலை இருந்த காரணத்தாலும் நேருவின் கொள்ளுப்பேரன் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரஸில் முன்னிறுத்தப்படும் காரணத்தாலும்தான் இப்படியொரு கட்டுக்கதை உருவாகியிருக்கிறது.
உண்மையில், நேருவுக்கும் ‘வாரிசு அரசிய'லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று அவர் நினைத்துப் பார்த்தது மில்லை; அப்படிப்பட்ட விருப்பமும் அவருக்கு இல்லை. இந்திய தேசிய காங்கிரஸைக் குடும்பத் தொழில்போல ஆக்கியது இந்திரா காந்திதான். முதலில் தனது மகன் சஞ்சயை அவர் கொண்டுவந்தார், சஞ்சயின் மரணத்துக்குப் பிறகு, தனது இன்னொரு மகன் ராஜீவைக் கொண்டுவந்தார்.
இரண்டு மகன்கள் விஷயத்திலுமே, இந்திரா காந்திக்குப் பிறகு காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் அவருடைய மகன்தான் வருவார் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்த விஷயம். ஆகவே, ‘நேரு-(இந்திரா) காந்திப் பரம்பரை' என்பது முறையாக ‘(இந்திரா) காந்தி பரம்பரை' என்றே அழைக்கப்பட வேண்டும்.
கட்டுக்கதை 2: காந்தியின் வழித்தோன்றலாக இருக்கத் தகுதியற்றவர் நேரு – உண்மையில், தனது குருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்துகொள்ளவில்லை; நேருவைத் தேர்ந்தெடுத்ததில் காந்தி தவறு செய்துவிட்டார்.
‘த குட் போட்மேன்' என்ற புத்தகத்தில் ராஜ் மோகன் காந்தி இந்தக் கட்டுக்கதையை அருமை யாக முறியடித்திருக்கிறார். பன்மைத்தன்மை கொண்டதும், எல்லோரையும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுமான இந்தியா என்ற காந்தியின் ஆதர்சமான கருத் தாக்கத்தை மற்றவர்களைவிட நேருதான் மிகவும் அற்புதமாகப் பிரதிபலித்தார் என்பதால், அவரைத் தனது அரசியல் வாரிசாக காந்தி தேர்ந்தெடுத்தார் என்பதை ராஜ்மோகன் காந்தி சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றவர்கள் - அதாவது, படேல், ராஜாஜி, அபுல் கலாம் ஆசாத், கிருபளானி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் - நேருவுக்கு மாறாக, அவரவர் சமூக நலன்கள் மீது சற்றுக் கூடுதல் அக்கறை கொண்டவர்கள். ஆனால், நேரு முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு இந்து; தென்னிந்தியர்களாலும் மதிக்கப்பட்ட ஒரு உத்தரப் பிரதேசக்காரர்; பெண்களும் மெச்சிய ஆண். காந்தியைப் போலவே, அவர் உண்மையிலேயே ஒரு அகில இந்தியத் தலைவராக விளங்கினார்.
கட்டுக்கதை 3: நேருவுக்கும் வல்லபபாய் படேலுக்கும் இடையில் பகைமை நிலவியது
‘வலிமையான' இந்தியா என்ற முழக்கத்தை முன்வைப்பவர்களால்தான், அதாவது பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடனும் சிறுபான்மையினருடனும் நேரு கனிவுடன் நடந்துகொண்டார் என்று நம்புபவர் களால்தான், இந்தக் கட்டுக்கதை முன்னெடுக்கப்பட்டது. இதோடு வால்பிடித்துக்கொண்டு இன்னொரு கட்டுக் கதையும் வரும்; அதாவது, நேருவைவிடச் ‘சிறப்பான' பிரதமராக படேல் இருந்திருப்பார் என்பதுதான் அது.
உண்மையில், நேருவும் படேலும் ஒரு அணி யாகப் பிரமாதமாகச் செயல்பட்டார்கள்; இந்தியா சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில், அந்த இருவரும் இரட்டைத் தளபதிகளாகச் செயல்பட்டு இந்தியா முழுவதையும் இணைத்தது மட்டுமல்லாமல், அதை வலுவாக்கினார்கள். இருவரும் மாறுபட்ட அணுகு
முறையையும் சித்தாந்தங்களையும் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால், அந்த வேறுபாடுகளெல்லாம் அவர்களது பொதுவான லட்சியத்தில் கரைந்துவிட்டன. சுதந்திரமான, ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாதான் அந்தப் பொது லட்சியம். படேலைவிட நேரு சிறப்பாகச் செயல்படக்கூடிய விஷயங்கள் சில இருந்தன - மக்களோடு நெருங்குதல், உலக நாடுகளுடன் தொடர்புகொள்ளுதல், பாதிப்புக்
குள்ளாகக்கூடிய சமூகங்களுக்கு (அதாவது முஸ்லிம்கள், பழங்குடியினர், தலித் மக்கள் போன்றோருக்கு) நம்பிக்கை ஏற்படுத்துதல் போன்றவற்றில் நேரு தேர்ந்தவர். நேருவைவிட படேல் சிறப்பாகச் செயல்படக் கூடிய விஷயங்கள் இருந்தன. சமஸ்தானங்களைக் கையாளுதல், கட்சியை வளர்த்தல், கட்சிக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளைச் சமாளித்துச்செல்லுதல் போன்றவைதான் அவை. இருவரும் மற்றவரின் திறமைகளை நன்கு அறிந்தவர்கள். ஒருவருக்கொருவர் மற்றவருடைய எல்லையில் பிரவேசிக்காதவர்கள். பிரிவினையின் சிதிலங்களிலிருந்து இந்தியாவை அவர்கள் இப்படித்தான் ஒன்றுசேர்ந்து புதிதாகக் கட்டமைத்தார்கள்.
கட்டுக்கதை 4: நேரு ஒரு ‘சர்வாதிகாரி'
எல்லோரையும்விட, குறிப்பாகக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இருப்பவர்களைவிட நேரு உயரத்தில் இருந்ததுபோன்ற தோற்றம் உண்மைதான். வெவ்வேறு கலாச்சாரங்கள்குறித்த அவருடைய பார்வையும், ஓவியம், இசை, இலக்கியம் அல்லது அறிவியல் ஆகியவற்றில் அவருக்கு இருந்த ஈடுபாடும் அவர் அளவுக்குப் பிறரிடம் இருந்ததில்லை. ஆனாலும், இந்திய ஜனநாயகத்தின் அமைப்புகளையும் மதிப்பீடு
களையும் போற்றி வளர்த்ததில் நேருவுக்கு இணை யாருமில்லை. வயதுவந்தோர் வாக்குரிமையை முதலில் முன்னெடுத்தது அவர்தான், நாடாளு மன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்த்தரப்பை அவர் வரவேற்றிருக்கிறார். அரசு நிர்வாகம், நீதித் துறை ஆகிய இரண்டின் சுதந்திரத்தையும் மிகவும் தீவிரமாகப் பராமரித்தவர் அவர். வின்சென்ட் ஷீயன் என்பவர் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “காந்திக்கும் நேருவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், பெரும்பான்மையினரின் கருத்து தனக்கு உவப்பாக இல்லாத கட்டத்திலும், காந்தி அவர்களோடு அனுசரித்துப்போக மாட்டார். மாறாக, அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்வார்; உண்ணா விரதம் இருப்பார்; பிரார்த்தனையில் ஈடுபடுவார்; தொழுநோயாளிகளைக் கவனித்துக்கொள்வார்; குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பார்.” நேருவோ, இதற்கு மாறாகப் பல முறை “கட்சியிலும் சரி, நாட்டிலும் சரி பெரும்பான்மையினரின் கருத்துகளுக்கு வழிவிட்டிருக்கிறார்.” இதற்கு ஓர் உதாரணம்: இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் விவகாரத்தில், அப்படிப் பிரிப்பது தனது கொள்கைக்கு எதிரானது என்றாலும், கட்சியும் நாடும் விரும்புகின்றன என்பதால் நேரு அதற்கு ஒப்புக்கொண்டது.
கட்டுக்கதை 5: பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை, ஸ்டாலினைப் பின்பற்றி, மையப்படுத்தப்பட்ட ஒரு மாதிரியை நேரு நிறுவினார். இதன் மூலம் நம்மைப் பல தசாப்தங்கள் பின்னுக்குத் தள்ளினார்.
விரைவாகவும் அதிக அளவிலும் தாரளமயமாக்க வேண்டும் என்று விரும்பியவர்களால் பரப்பப்பட்ட கதை இது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தியைப் பின்பற்றும் பொருளாதார வளர்ச்சியின் மாதிரிக்கு ஆதரவாக அப்போது பரவலான கருத்தொற்றுமை நிலவியது என்பதே உண்மை.
ரஷ்யா மட்டுமல்ல… ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டன. ஒரு விஷயம் என்னவென்றால், மிதமிஞ்சியதும் சில சமயங்களில் தீங்கு விளை விக்கக்கூடியதுமான அந்நிய முதலீடுகளைப் பற்றிய காலனியாதிக்கக் கால அனுபவங்கள் மூலம் இந்தியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இன் னொரு விஷயம், இந்தியத் தொழில்துறைக்குப் பாதுகாப்பும் அரசாங்கத்தின் ஆதரவும் மானியமும் தேவைப்பட்டது. உண்மையில், அந்தக் காலத்தின் முக்கியமான முதலாளிகளால் கையெழுத்திடப்பட்ட பம்பாய் திட்டம்-1944, எரிசக்தி, நீர், போக்குவரத்து, சுரங்கங்கள் மற்றும் அதுபோன்ற துறைகளில் அரசின் தலையீட்டைக் கோரியது; இந்தத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லையென்பதால், அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்று முதலாளிகள் கேட்டுக்கொண்டார்கள்.
நாம் இந்த ‘தொழில்மயமாதல்' பாதையை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பதைப் பற்றியதுதான் இந்த வாதமெல்லாம். உண்மையில் - தொழிலதி பர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞர்கள், அரசியல்வாதிகள் என்று பல்வேறு தரப்புகளும் பல்வேறு சித்தாந்தங்களும் நேருவுடன் அனுசரித்துப்போயின. இன்னும் சொல்வதென்றால், நேருவும் அவற்றுடன் அனுசரித்துப்போனார்.
ஜவாஹர்லால் நேரு அளவுக்கு வாழும்போது போற்றப்பட்டவர்களும், மரணத்துக்குப் பிறகு தூற்றப்பட்டவர்களும் இல்லை. தூற்றுதலுக்குப் பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளே காரணம். இந்தக் கட்டுக் கதைகளைதான் அப்பாவி மக்கள் நம்பினார்கள்.
- ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர், எழுத்தாளர்.
தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: ஆசை

Wednesday, March 26, 2014

சீனப் போர்: பலிகடா ஆக்கப்பட்டாரா நேரு?

1962, சீனப் போரின்போது உண்மையில் என்ன நடந்தது என்பதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் ஹெண்டர்சன் புரூக்ஸும் பிரிகேடியர் பிரேமிந்திர பகத்தும் தெரிவிக்கும் கருத்துகள் இந்த மாதம் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சீனப் போரில் நடந்த குளறுபடிகளுக்கு அப்போதைய பிரதமர் நேருவே காரணம் என்றும், இந்தியாவின் ராணுவக் கொள்கை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வலதுசாரி அரசியல் தலைவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிட்டது. சீனாவுடனான சண்டையில் இந்தியா தோற்றதற்குக் காரணம், ராணுவம் தயார் நிலையில் இல்லை, ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் வாங்குவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை, தெளிவான அரசியல் வழிகாட்டல் இல்லை, பாதுகாப்பு அமைச்சர் சரியில்லை என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வெளிவருகின்றன.
நேருவைப் பலிகடாவாக்கும் முயற்சி
நேருதான் ராணுவத்தைப் பலமிழக்கவைத்துத் தோற்கடிக்க வைத்தார் என்றே பெரும்பாலானோர் சாடுகின்றனர். சில தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் பரிசீலித்து ஆராய்ந்தால், அந்த விமர்சனம் எந்த அளவுக்குத் தவறு என்று புரியும்.
1947 முதல் 1962 வரை இந்திய ராணுவத்தில் ஜவான்களின் எண்ணிக்கை 2,80,000-த்திலிருந்து 5,50,000 ஆக உயர்ந்துவந்திருக்கிறது. ராணுவத்துக்கான செலவு 1951-52-ல் ரூ.190.15 கோடியாக இருந்தது; 1961-62-ல் ரூ. 320.34 கோடியாக அதிகரித்தது. புதிதாக சுதந்திரம் அடைந்த, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடாக இருந்த நிலையிலும், ராணுவத்துக்காக இந்த அளவுக்குச் செலவிடப்பட்டிருக்கிறது என்று ராணுவம் தொடர்பான புள்ளிவிவரங்களில் நிபுணரான கே. சுப்ரமணியம் 1970-ல் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
தரைப்படைக்காக ஒரு டிவிஷன் அளவுக்கு செஞ்சுரியன் ரக டேங்குகளும், 2 ரெஜிமெண்டுகளுக்குத் தேவைப்பட்ட ஏ.எம்.எக்ஸ்.-13 இலகு ரக டேங்குகளும் வாங்கப்பட்டன. இந்த டேங்குகளைக் கொண்டுதான் கமேங் என்ற இடத்தில் சீனத் துருப்புகளுக்கு எதிராக இந்தியா சண்டையிட்டது. சீனப் படையிடம் டேங்கு வசதி இல்லாத நிலையிலும், இந்திய ராணுவத்தைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தது.
ஒரே சமயத்தில் சண்டை விமானமாகவும் குண்டு வீச்சு விமானமாகவும் பயன்படக்கூடிய ‘ஹண்டர்’ ரக விமானங் களை ஒரு ஸ்குவாட்ரன் அளவுக்கு விமானப் படை வாங்கியிருந்தது. இதுபோக இரண்டு ஸ்குவாட்ரன்கள் ‘ஔராகான்ஸ்’ ரக போர் விமானங்களும் ‘நாட்’ ரக விமானம் இரண்டும்கூட வாங்கப்பட்டன. சீனாவிடம்கூட அப்போது இது போன்ற விமானங்கள் இல்லை. கடற்படையோ விமானம்தாங்கிக் கப்பலொன்றையும் மூன்று நாசகாரி ரகக் கப்பல்களையும், புதிதாக 11 போர்க் கப்பல்களையும் வாங்கியிருந்தது.
நேரு எப்போதுமே சமாதான விரும்பியாக இருக்கலாம், ஆனால் தன்னுடைய ராணுவத்தையும் அவர் தயார் நிலையிலேயே வைத்திருந்தார் என்பதை இவற்றிலிருந்து அறிய முடிகிறது. இருந்தும், இந்தியா தோற்றது. சண்டைக்குத் தயாரான ராணுவம் நம்மிடம் இல்லாததால் நாம் தோற்கவில்லை; தவறான முறையில் சண்டையிட்டதால்தான் தோற்றோம். உலகின் பல நாடுகளில் மிகச் சிறந்த ராணுவங்களுக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.
அப்படியானால் எங்கே நடந்தது தவறு?
சீனத்தின் சின்ஜியாங்கையும் திபெத்தையும் இணைக்க அக்சாய் சின் சமவெளிப்பகுதியில் நீண்ட சாலையை
1957-லேயே சீனா அமைத்து முடித்து விட்டது. புல் பூண்டு கூட முளைக்காத களர் நிலம் இப்போது ராணுவரீதியாக முக்கியமான தளமாகப் பயன்பட்டது சீனாவுக்கு. 1959-ல்
சீன ஆதிக்கத்துக்கு எதிராக திபெத்தில் புரட்சிக் குரல்கள் உயர்ந்தபோது, இந்தியாதான் இவர்களுக்குத் தூபம்போடுகிறதோ என்று சீனா கருதியதால் பதற்றம் அதிகரித்தது. அக்சாய் சின் பகுதி நோக்கிச் சென்ற இந்திய ரோந்து அணி தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு முறை இந்தியக் குழுவினரை நோக்கி சீனர்கள் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலைகொண்டிருந்த இந்தியத் துருப்புகளுக்கு சீனத்திடமிருந்து மிரட்டல்கள் வந்தன. இடத்தைக் காலிசெய்துவிட்டு உங்கள் நாட்டுக்குச் செல் லுங்கள் என்று எச்சரித்தனர். 1959 அக்டோபரில் தெற்கு லடாக்கின் கோங்கா என்ற இடத்தில் இந்திய ராணுவக் காவல் சாவடி மீது சீனத் துருப்புகள் துப்பாக்கிகளால் சுட்டு ஒன்பது பேரைக் கொன்றுவிட்டு பத்துப் பேரைச் சிறைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இப்படியெல்லாம் இந்தியாவுக்கு நெருக்கடி தந்து அருணாச்சலப் பிரதேசத்துக்குப் பதிலாக அக்சாய் சின் பகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதே சீனாவின் நோக்கமாக இருந்தது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவிக்கிறது. நேருவும் இந்திய மக்களிடம் அத்தகைய பரிமாற்றத்துக்கு ஆதரவான எண்ணத்தை உருவாக்கவே திட்டமிட்டிருந்தார். கோங்கா வில் இந்தியச் சாவடி மீது சீனா நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் அவரது முடிவை மாற்றிவிட்டது.
முன்னரங்கக் கொள்கை
இதற்குப் பதிலடியாக ‘முன்னரங்கக் கொள்கையை' நேரு முன்வைத்தார். 1960 முதல் இந்திய ராணுவ ஜவான்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து அக்சாய் சின் பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலைகொள்ளத் தொடங்கினர். சீனா கைப்பற்றிய நிலங்களின் உள்பகுதியிலும் இந்தியத் துருப்புகள் இப்படிப் போய் நின்றுகொண்டனர்.
1962-ன் கோடைக் காலத்தில் அக்சான் சின்னை ஒட்டிய பகுதிகளில் இந்தியத் துருப்புகளும் சீனத் துருப்புகளும் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நின்றுகொண்டனர். ஆனால், அப்போது இந்தியத் துருப்புகளுக்கு உணவு, தளவாடம், ஆயுதங்கள் போன்றவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க் கவும், அடிபட்டவர்களைச் சிகிச்சைக்காக முகாம்களுக்குத் தூக்கிவரவும் சாலை வசதிகளே இல்லாமலிருந்தது. எனவே, துருப்புகள் போய் நின்றுகொண்ட பகுதிகளை நீண்ட நாள்களுக்கு அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அப்படிப் போய் நின்றது ராணுவரீதியாக எந்த வகையிலும் உதவவில்லை. மாறாக, நீங்கள் திரும்பிப் போங்கள் என்று சீன அரசு கூறினால், நீங்களும் திரும்புங்கள் என்று பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றே கருதப்பட்டது. இந்திய ராணுவத்தை சீனா நிர்பந்தப்படுத்தி வெளியேற்றாது என்றே நேரு உறுதியாக நம்பினார்.
அவர் நினைத்தது தவறு மட்டுமல்ல, ஏற்கத் தக்கதும் அல்ல. ராணுவரீதியாக நாம் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு இந்தியா வுடன் மோதலை மேற்கொள்ளாதீர்கள் என்றே தன்னுடைய தளபதிகளுக்கு சீன அதிபர் மாசேதுங் அறி வுறுத்தியிருந்தார். அப்படி இந்தியாவைத் தாக்கினால் அதையே சாக்காக வைத்து அமெரிக்கா, கிழக்கு ஆசியாவில் மூக்கை நுழைக்கும் என்று அஞ்சினார்.
சோவியத் தலைவர் நிகிடா குருஷ்சேவ், கோங்கா காவல் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களை சீனா தாக்கியதைக் கண்டித்தார். “இந்தியாவுடன் சண்டைக்குப் போகாதீர்கள், வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் அரவணைப்பில் இந்தியா சென்றுவிடும்” என்றும் எச்சரித்தார்.
நேருவின் முன்னரங்கக் கொள்கைக்கு மாற்றுச் சிந்தனை எதையும் இந்திய ராணுவத் தலைமையும் முன்வைக்கவில்லை. இந்திய ராணுவத்தின் மேற்கத்திய படைப்பிரிவின் தலைமைத் தளபதியான லெப். ஜெனரல் தௌலத் சிங் ஒரு யோசனையைத் தெரிவித்தார். “சீனா இப்போது பிடித்துள்ள நிலப் பகுதிகள் அப் படியே இருக்கட்டும். நாம் நம்முடைய எல்லைக்கு முதலில் நல்ல சாலைகளைப் போடுவோம். பிறகு, தளவாடங்களையும் ஆயுதங்களையும் அங்கே கொண்டுபோய்ச் சேர்ப்போம். லடாக்கில் ஒரு டிவிஷன் அளவுக்குத் துருப்புகளை மேலும் குவிப்போம். அதன் பிறகு சீனாவிடம் பேசலாம்” என்றார்.
தௌலத்தின் இந்த யோசனை, இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் மேற்கொண்டு வந்த ஊடுருவல் களையும் ஆக்கிரமிப்புகளையும் தடுத்து நிறுத்தும் திறனற்றதாக இருந்தது என்று ராணுவ விஷயங்களில் நிபுணரான அறிஞர் நாத் ராகவன் நினைவுகூர்கிறார்.
கடந்த ஆண்டு (2013) லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி என்ற இடத்திலும் 1962 போருக்கு முந்தைய சூழலே திரும்பியது. இந்தியத் துருப்புகளும் சீனத் துருப்புகளும் நேருக்கு நேர் கைகலக்கும் நிலைமை ஏற்பட்டது. சீனாவில் புதிதாகக் காணப்படும் தேசிய எழுச்சியும் ராணுவத்தை வலுப்படுத்துவதில் அது காட்டும் தனிக் கவனமும் இந்தியாவும் தன்னுடைய ராணுவத்தை எல்லா வகையிலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்துவருகிறது.
© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

காந்தி நினைத்திருந்தால்...



சில சர்ச்சைகள் வரலாற்றில் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் அவை எழுப்பப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சர்ச்சைகளுள் ஒன்றுதான் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்படுவதிலிருந்து பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய புரட்சியாளர்களை காந்தியால் காப்பாற்றியிருக்க முடியுமா என்பதும். காந்தியின் வழிமுறையும் பகத் சிங்கின் வழிமுறையும் முற்றிலும் வேறுபட்டவை. ஆகவே, கோடிக் கணக்கான சாதாரண மக்கள் பகத் சிங்கைக் கொண்டாடியபோதிலும் காந்தி அவரை முற்றிலும் நிராகரித்தது எந்த விதத்திலும் ஆச்சர்யத்துக்குரியதல்ல. அது கொள்கைரீதியானது. வன்முறையைத் தனது பாதையாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காந்தி சொல்லியிருந்தாலோ, இன்னும் ஒரு படி மேலே சென்று, பகத் சிங் செய்த கொலைக்காக, வன்முறைக்காக அவர் தூக்கிலிடப்படுவது ஆங்கிலேயே ஆட்சியின் பார்வையிலிருந்து முற்றிலும் சரியே என்று காந்தி வாதிட்டிருந்தாலோ கூட அதில் ஒருவர் தவறு காண முடியாது.
ஆனால், காந்தி அப்படி வெளிப்படையாக நடந்துகொள்ள வில்லை. அதன் காரணமாகவே இன்றளவும் காந்தியின் ஆதரவாளர்கள் “பகத் சிங் மற்றும் அவரது தோழர்களின் விடுதலைக்காக காந்தி தனிப்பட்ட முறையில் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். அனைத்துக்கும் இன்று திட்டவட்டமான கடித ஆதாரங்கள் ஆவணக் காப்பகங்களில் உள்ளன’’ என்று கூறிவருகின்றனர். ஆனால், ஆவணக் காப்பகங்களில் கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு நேர்மாறானதாக இருப்பது காந்திக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
பகத் சிங் உருவாகிறார்…
1928 அக்டோபர் 30, லாகூரில் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப் பட்ட லாலா லஜபதி ராயை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளர் ஜே.ஏ. ஸ்காட் லத்தியால் கடுமையாகத் தாக்கினார். இதனால், பலத்த காயங்களுக்கு ஆளான ராய், நவம்பர் 17-ல் மரணமடைந்தார். இது பஞ்சாப் முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராயின் சாவுக்குக் காரணமான ஸ்காட்டைக் கொல்வது என பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் முடிவுசெய்தனர். ஆனால், ஸ்காட்டைக் கொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக துணை கண்காணிப்பாளர் ஜே.பி. சான்டர்ஸைச் சுட்டுக்கொன்றனர்.
தப்பிச்சென்ற பகத் சிங்கும் அவரது தோழர்களும் அத்துடன் சும்மா இருக்கவில்லை. 1929, ஏப்ரல் 8 அன்று டெல்லி மத்திய சட்டமன்றத்தில் பகத் சிங்கும் அவரது தோழர் பட்டுகேஷ்வர் தத்தும் யாருக்கும் ஆபத்தில்லாத வகையில் வெடிகுண்டு ஒன்றை வீசினர். அவர்களது நோக்கம், யாரையும் கொல்வது அல்ல என்பதுடன் தப்பிச்செல்லும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கவில்லை. தாங்கள் கைதாவதன் மூலம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்நிய ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்களைக் கிளர்ந்தெழச் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். தாங்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் சான்டர்ஸ் கொலை வழக்குக்காகத் தாங்கள் தூக்கிலிடப்படுவோம் என்பதை அறிந்தே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர். தங்கள் வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும், தாங்கள் தூக்கிலிடப்படும் பட்சத்தில் அது மக்களிடையே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, பெரும் கோபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பினர். அதுவே நடந்தது. (தான் ஒரு போர்க் கைதியாக நடத்தப்பட வேண்டுமென்றும் தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாகத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென்றும் பகத் சிங் கோரினார்). இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே எதிரான வகையில் நடத்தப்பட்டதைப் பல சட்ட நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
காந்தி - இர்வின் குறிப்புகள்
இந்த வழக்கில் 1930 அக்டோபர் 7-ம் தேதி பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கும் அவர்கள் தூக்கிலிடப்பட்ட 1931 மார்ச் 23-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் காந்திக்கும் அன்றைய வைஸ்ராய் இர்வினுக்கும் இடையில் அரசியல் உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை நடந்தது. தூக்கு தண்டனையை ஆங்கில அரசு ரத்துசெய்வதை உடன்படிக்கைக்கான நிபந்தனையாக காந்தி வைக்கும் பட்சத்தில் பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் காப்பாற்ற முடியும் என்று நாடே உறுதியாக நம்பியது. பேச்சுவார்த்தை நடந்தது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் காப்பாற்ற வைஸ்ராயிடம் காந்தி வைத்த கோரிக்கையின் தன்மையே காந்தி என்ன விரும்புகிறார் என்பதை இர்வினுக்குத் தெளிவாகக் காட்டியது. பிப்ரவரி 18-ல் நடந்த பேச்சுவார்த்தையைப் பற்றி இர்வின், காந்தி இருவருமே குறிப்பு எழுதிவைத்துள்ளனர். இருவரின் குறிப்புகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை.
இர்வினின் குறிப்பு:
பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அல்லாமல் பேச்சுவார்த்தையின் இறுதியில், பேச்சுவார்த்தைக் குத் தொடர்பில்லாமல் பகத் சிங் வழக்குபற்றி காந்தி குறிப்பிட்டார். ஒரு உயிரை எடுப்பது என்பது அவரது கொள்கைக்கு மாறானது என்பதால், முடிவெடுப்பது அவராக இருப்பின் தூக்கு தண்டனையை ரத்துசெய்வார் என்றபோதிலும், அவர் தூக்கு தண்டனையை ரத்துசெய்யக் கோரவில்லை. இன்றைய சூழ்நிலையில், தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டார்.
காந்தியின் குறிப்பு:
நான் பகத் சிங் பற்றி அவரிடம் (வைஸ்ராயிடம்) பேசினேன். நான் அவரிடம் சொன்னேன்: ‘‘நமது பேச்சுவார்த்தையுடன் தொடர்பற்ற விஷயம் இது. இதைப் பற்றி நான் பேசுவதுகூடப் பொருத்தமற்றதாக இருக்கலாம்... நானாக இருந்தால் அவரை விடுதலை செய்வேன். ஆனால், ஒரு அரசாங்கம் அப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்க மாட்டேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் பதிலே அளிக்காத பட்சத்திலும் அதை நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.’’
‘‘மேதகு வைஸ்ராய் அவர்களே, பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்ற உங்களிடம் நான் கோரிக்கை வைத்தேன் என்று வெளியே சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமிருக்கிறதா என்று காந்தி என்னிடம் கேட்டார்’’ என்று இர்வின் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது, காந்தி வைத்த கோரிக்கை எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.
காந்தியின் கடிதம்
ஆக, காந்தியின் கோரிக்கை, தூக்கை ரத்துசெய்வது அல்ல. தற்காலிகமாக நிறுத்திவைப்பது. ஏனெனில், பகத் சிங் தூக்கிலிடப்படுவது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்; அது கராச்சி காங்கிரஸ் மாநாட்டைப் பாதிக்கும் என்று காந்தி அஞ்சினார். மார்ச் 5-ம் தேதி காந்தி - இர்வின் உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் நடந்த சந்திப்புகளிலும், தூக்கு தண்டனையை ரத்துசெய்யும் கோரிக்கையை காந்தி வைக்கவில்லை. 24-ம் தேதியன்று காலை பகத் சிங் தூக்கிலிடப்படுவார் என்பதை பத்திரிகைகள் வாயிலாக காந்தி அறிந்திருந்தார். மார்ச் 23-ம் தேதியன்று தூக்கு தண்டனையை ரத்துசெய்யக் கோரி இர்வினுக்குக் கடிதம் எழுதினார் காந்தி. அன்று மாலையே மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இப்படிக் கடைசி நேரத்தில் கடிதம் எழுதுவதில் பலனேதும் இருக்காது என்பது காந்திக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இதே கடிதத்தை, பேச்சுவார்த்தையின்போது காந்தி எழுதியிருந்தால், நிச்சயம் தூக்கு ரத்துசெய்யப்பட வாய்ப்பு இருந்திருக்கும்.
அகிம்சையைத் தனது உயிர் மூச்சாகக் கருதிய காந்தி, தூக்கு தண்டனையைக் கோட்பாடுரீதியாக ஏற்றுக்கொண்டவரில்லை (ஆனாலும், தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல்கொடுக்கவும் இல்லை). இந்த அடிப்படையில் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமலேயே பகத் சிங் உள்ளிட்டோர் உயிர்களை காந்தி காப்பாற்றியிருக்க முடியும். பெஷாவரில் சத்தியாக்கிரகிகளைச் சுட மாட்டோம் என்று மறுத்து தண்டனைக்கு ஆளான கர்வாலி ராணுவ வீரர்களை மன்னிக்கும்படி ஏன் வைஸ்ராயிடம் கேட்கவில்லை என்று காந்தியை ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது காந்தி அளித்த பதில்: ‘‘சுடு உத்தரவை மீறும் ஒரு ராணுவ வீரர், தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறுவதுடன், கீழ்ப்படிய மறுக்கும் குற்றத்துக்கும் ஆளாகிறார். கீழ்ப்படிய மறுக்கும்படி வீரர்களையும் அதிகாரிகளையும் நான் கேட்க மாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் அமரும்போதும் இதே அதிகாரிகளையும் வீரர்களையும்தான் பயன்படுத்த வேண்டும். கீழ்ப்படிய மறுக்க இப்போது நான் அவர்களுக்குக் கற்றுத்தந்தால் நான் அதிகாரத்துக்கு வரும்போதும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று அஞ்சுகிறேன்.’’
க. திருநாவுக்கரசு, சமூக அரசியல் விமர்சகர், 
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

பகத் சிங்கின் இறுதி நாள்...

புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்!
லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.
பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.
கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.
“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.
அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடை நோக்கி...
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும் 
இது எங்கள் மண்ணாக இருக்கும் 
இது எங்கள் வானமாக இருக்கும் 
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில் 
மக்கள் கூடுவார்கள் 
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு 
மரியாதை செலுத்துவார்கள்.”
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.
“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.
அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.
சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
புரட்சியால் மட்டுமே முடியும்!
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.
ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.
இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.
குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.