Sunday, October 9, 2011

மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?


Mom in law and Daughter in law
இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்....அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!

நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.

ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.

பொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.

அன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.

நேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர் வாங்கிவிடுவீர்கள்.

மாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன்பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா? அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள் நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.

பிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?



Husband and wife
உங்கள் கணவரை உங்கள் கைக்குள்வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.

கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..

காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.

கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.

கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.

கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.

கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.

கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீர்கள். குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.

உங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் அருமையான மாற்றங்களை...!