அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:
1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.
2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.
3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.
4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.
6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.
7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.
8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.
9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.
10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.
11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.
12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.
அயோத்தி வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி பகுதி 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றும் அறக்கட்டளையான நிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத்த் தீர்ப்பை வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான சுதிர் அகர்வால் அவர்களின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:
1. சர்ச்சைக்குரிய இடத்தில் மையக் கூரையின் கீழ் உள்ள பகுதி இந்துக்களின் மதநம்பிக்கைகளின் படி ராமர் பிறந்த இடமே.
2. சர்ச்சைக்குரிய பகுதி எப்போதும் மசூதி என்பதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு நம்பப்பட்டு வருகிறது. இதனால் மொகமதியர்கள் இங்கு வழிபாடு செய்துவந்தனர். இருப்பினும் அது பாபரால் 1528ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.
3. இது குறித்த மாற்று கோரிக்கைகளோ, வேறு தடயங்களோஇல்லாத பட்சத்தில் சர்ச்சைக்குரிய அமைப்பு எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாது. ஆனால் ஜோசப் டைஃபென்தாலர் என்பவர் வருவதற்கு முன் 1766 - 1771 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது வரை தெளிவாக உள்ளது.
4. சர்ச்சையில் உள்ள இந்த கட்டிடம், அதற்கு முன்பு அங்கிருந்த இஸ்லாம் அல்லாத சமயக் கட்டிட அமைப்பைத் தகர்த்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது இந்துக் கோயில்.
5. சர்ச்சையில் உள்ள கட்டிடந்த்தின் மையக்கூரையின் கீழ்ப்பகுதியில் விக்ரகங்கள் டிசம்பர் 1949ஆம் ஆண்டு 22 மற்றும் 23ஆம் தேதி இரவில் வைக்கப்பட்டது.
ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு:
1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா?
தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது.
இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. அது வடிவமற்றதாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வணங்குபவரின் பிரார்த்தனைக்கேற்ப உருவமாகவும் வரக்கூடியதாகும்.
2. தகராறுக்கு உட்பட்ட அந்த கட்டடம் ஒரு மசூதியா? அது எப்போது, யாரால் கட்டப்பட்டது?
தீர்ப்பு: தகராறுக்கு உட்பட்ட அந்தக் கட்டடம் பாபரால் கட்டப்படது. எந்த ஆண்டில் என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஆனால் அது இஸ்லாத்தின் நெறிகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. எனவே அது மசூதி என்பதற்குரிய தகுதியை பெற்றிருக்க முடியாது.
3. அங்கிருந்த ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்த மசூதி கட்டப்பட்டதா?
தீர்ப்பு: ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கட்டுமானத்தை தகர்த்தப் பின்னரே தகராறுக்குட்பட்ட இந்தக் கட்டடம் (பாபர் மசூதி) கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுமானம் ஒரு ஹிந்து மதம் தொடர்பானது என்று இந்திய தொல்லியல் துறை நிரூபித்துள்ளது.
4. அந்தக் கட்டத்திற்குள் இராமர் உள்ளிட்ட சிலைகள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் வைக்கப்பட்டதா?
தீர்ப்பு: தகராறுக்குட்பட்ட அந்த கட்டடத்தின் நடுக் கூரைக்குக் கீழே 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
5. தகராறுக்குட்பட்ட அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடும் மனுக்கள் ஏதேனும் அதற்குரிய கால வரையறையைத் தாண்டியவையா?
தீர்ப்பு: 1989ஆம் ஆண்டு உ.பி. மாநிலம், லக்னோ சுன்னி மத்திய வக்்ப் வாரியம் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராக கோபால் சிங் விஷாரத் மற்றும் பலர் ஆகியோர் தொடர்ந்த மனு ஒ.எஸ்.எஸ். எண் 4,
1989ஆம் ஆண்டு நிர்மோஹி அஹாரா மற்றும் ஒருவருக்கு எதிராக ஜமுனா பிரசாத் சிங் மற்றும் பலர் தொடுத்த மனு ஓ.எஸ்.எஸ். எண் 3 ஆகியன காலம் கடந்தவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன.
6. தகராறுக்கு உட்பட்ட கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி தொடர்பான நிலை என்ன?
தீர்ப்பு: இந்த தகராறுக்கு உட்பட்ட இடத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் இராம் சந்திர ஜி பிறந்த இடமும், சரண், சீதா ரசோய் ஆகியனவும், வழிப்படப்படும் மற்ற சிலைகளும், பொருட்களும் ஹிந்துக்களுக்கே உரியவை. நினைவிற்கு எட்டாத காலம் முதலே தகராறுக்குரிய அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தகராறுக்குட்பட்ட கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னர் அந்த இடத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22,23ஆம் தேதிகளுக்குட்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தகராறுக்குட்பட்ட இடத்தின் வெளிப்பகுதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதும். வெளியேயும், தகராறுக்கு உட்பட்ட உள்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தகராறுக்குட்பட்ட கட்டுமானம் (பாபர் மசூதி) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை மசூதி என்று ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதி தரம் வீர் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.