Wednesday, September 22, 2010
நினைவுப்பாதை: 'டை' ஆன சென்னை டெஸ்ட்
COURTESY : WEBDUNIA TAMIL
செப்டம்பர் 22ஆம் தேதியான இன்றைய தினத்தில் வரலாற்றில் பலதரப்பட்ட மனிதரகளுக்கும், நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல நிகழ்ந்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை 1986 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் போட்டி மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாகும்.
இன்று கவாஸ்கர்/பார்டர் கோப்பை என்று இந்திய - ஆஸ்ட்ரேலிய தொடர் பிரபலமடைந்ததற்குக் காரணமான பார்டரும், கவாஸ்கரும் தங்களை எதிர்த்து விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும் இது.
கவாஸ்கர் தொடர்ச்சியாக 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இந்த டெஸ்ட் போட்டியின் முதற்கண் சாதனையாகும்.
டீன் ஜோன்ஸின் காவியமான இரட்டைச் சதம், வெயில் தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தது, கிரேக் மேத்யூஸ் என்ற ஆஸ்ட்ரேலிய ஆஃப் ஸ்பின்னரின் மைதான சேஷ்டைகளும், ஆஸ்ட்ரேலிய வீரர்களிடத்தில் பொதுவாகக் காணப்படாத நட்பான புன்முறுவலும், கபில்தேவின் அபாரமான சதமும், கவாஸ்கரின் வெற்றிகான 90 ரன்களும், அனைத்தையும் விட இந்த நாளில் சேப்பாக்கத்தில் 30,000 ரசிகர்கள் களைகட்டியதும் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
1960-61 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்று இதற்கு முன் ரன் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அது 498-வது டெஸ்ட் போட்டி அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினத்தில் சென்னையில் டை ஆன டெஸ்ட் போட்டி 1052-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாக மாற்றியதில் ஆலன் பார்டருக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. அவர் 4ஆம் நாள் ஸ்கோரான 170/5 என்று டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 5ஆம் நாளன்று சவாலான 348 ரன்கள் இலக்கை நிர்ணயித்தார்.
முதலில் டாஸ் வென்ற ஆலன் போர்டர் ஒன்றுக்கும் உதவாத ஆட்டக்களத்தில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆஸ்ட்ரேலிய அணியில் டெவிட் பூன், ஆலன் பார்டர் சதம் எடுக்க, ஆண்ட்ரூ ஜோன்ஸ் அபாரமான இரட்டைச் சதம் எடுத்தார். ஆனால் உடலில் உள்ள தண்ணீர் வற்றி அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையாயிற்று.
3ஆம் நாள்தான் ஆஸ்ட்ரேலியா 574/7 என்று டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் ஷிவ்லால் யாதவ் மட்டுமே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணியில் அப்போது அதிரடி துவக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இவரும் கவாஸ்கரும் களமிறங்கினர். வேடிக்கை என்னவெனில் கவாஸ்கர் 8 ரன்கள் எடுப்பதற்குள் ஸ்ரீகாந்த் அரை சதம் எடுத்து முடித்து விட்டார்.
புரூஸ் ரீட், கிரெய்க் மெக்டர்மாட் அவரிடம் சரியான வாங்கு வாங்கினர். ஸ்ரீகாந்த் 62 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா கவாஸ்கர், அமர்நாத் ஆகியோரையும் இழந்து 65/3 என்று ஃபாலோ ஆனைத் தவிர்க்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் அதன் பிறகு அசாருதீன் (50), சாஸ்திரி (62) பண்டிட் (35) என்று ஸ்கோர் 3ஆம் நாள் ஆட்டத்தில் 270/7 என்ற நிலையை எட்டியது. ஆனாலும் ஃபாலோ ஆன் அச்சுறுத்தல் இல்லாமலில்லை. விழுந்த 7 விக்கெட்டுகளில் கிரெக் மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். அவரது பந்து வீச்சும், பீல்டிங்கும் பெரும் அச்சுறுத்தலாயிருந்த சமயம் அது.
கபில்தேவின் அபாரமான கேப்டன் இன்னிங்ஸ்!
4ஆம் நாளின் போது கபில்தேவ் 33 ரன்களுடனும், இவரது சிஷ்யர் சேத்தன் ஷர்மா 14 ரன்களுடனும் களமிறங்கினர்.
சேத்தன் ஷர்மா ஒரு முனையைத் தக்கவைக்க, கபில்தேவின் அதிரடி இன்னிங்ஸை எதிர்பார்த்து அன்று திரண்டிருந்த ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. கபில்தேவ் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடியதோடு அபாரமான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார்
ஷர்மாவும் கபிலும் 8-வது விக்கெட்டுக்காக 85 ரன்களைச் சேர்த்தனர் ஷர்மா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கபில்தேவ் மொத்தம் 21 பவுண்டரிகளை விளாசினார். 50 ரன்களிலிருந்து சதத்தை எட்டும் வரை 11 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குதியாட்டம் போட வைத்தார்.
ஷிவ்லால் யாதவும் 19 ரன்கள் எடுத்து கைகொடுக்க, கபில்தேவ் 138 பந்துகளில் 21 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 119 ரன்கள் எடுத்து கடைசியாக மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். இந்தியா 397 ரன்கள் எடுத்திருந்தாலும் 177 ரன்கள் பின் தங்கியிருந்தது.
அபாரமான டிக்ளேர்!
ஆஸ்ட்ரேலியா தன் இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியபோது ஜெஃப் மார்ஷ், ரவிசாஸ்திரியின் 100-வது விக்கெட்டாகச் சாய்ந்தார்.
சற்றே வேகமாக ரன்களைக் குவித்த ஆஸ்ட்ரேலியா 170/5 என்று 4ஆம் நாள் ஆட்ட்டத்தை முடித்தது.
ஒருவருக்கும் தெரியாது 5ஆம் நாளன்று வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான் புகழ் பெற்ற டிக்ளரேஷன் அப்போது செய்யப்படும் என்று.
ஆனால் மறுநாள் இந்தியா களமிறங்கும்போதுதான் ஆலன் போர்டர் என்ற சவாலான ஆஸ்ட்ரேலிய கேப்டன் நம் கண்களுக்குத் தெரிந்தார். அந்தத் தொடரில் இதற்கு முன்பான இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே டிரா ஆக, இதுவும் அறுவையான டிரா ஆகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் டெஸ்ட் போட்டிக்கான விறுவிறுப்பைக்கூட்ட பார்டர் டிக்ளேர் செய்தார்.
போர்டர் டிக்ளேர் செய்வாரா மாட்டாரா என்று தெரியாத நிலையிலும் சென்னை சேப்பாக்கத்தில் அன்று 30,000 ரசிகர்கள் திரண்டனர் என்பது அப்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்பட்ட விதத்தை எடுத்துரைப்பதாய் அமைந்தது.
வரலாற்று சிறப்பு மிக்க 5ஆம் நாள் ஆட்டம்!
மொத்தம் அன்றைய தினம் 86 ஓவர்கள் மீதமுள்ளன 348 ரன்கள் வெற்றி இலக்கு. அப்போதெல்லாம் ஸ்ரீகாந்த் என்றால் ரசிகர்களுக்குக் கொள்ளைப் பிரியம்.
அவரும் கவாஸ்கரும் இறங்கும் போது மைதானத்தில் ஆரவாரக்கூச்சல் அதிகமானது.
வழக்கம் போல் ஸ்ரீகாந்த், மெக்டர்மாட், புரூஸ் ரீட் ஆகியோரை பொளந்தார். மெக்டர்மாட் 5 ஓவர்களி 27 ரன்களை விட்டுக் கொடுத்து அதன் பிறகு ஏனோ அவர் வீசவில்லை. 49 பந்துகளில் 6 பவுண்டரிகளூடன் 39 ரன்கள் எடுத்து ஸ்ரீகாந்த் மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழக்க, அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து ஸ்கோரை உணவு இடைவேளையின் போது 94 ரன்களுக்கு உயர்த்தினர்.
அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 103 ரன்களைச் சேர்த்தனர். இருவரது ஆட்டமும் ஒரு கடைசிநாள் சுழற்பந்துகள் திரும்பும் ஆட்டக்களத்தில் எப்படியான கறார் தடுப்பு உத்திகளையும், ஷாட்டிற்கான பந்துகளை தேர்வு செய்வது எப்படி என்பதையும் இளைஞர்களுக்குக் கற்று கொடுக்கும் விதமான ஆட்டமாகும்.
அமர்நாத்தும் 51 ரன்கள் எடுத்து மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 193/2 என்று இருந்தது. இன்னும் 30 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 155 ரன்கள்.
இந்திய அணிக்கு இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அசார், கபில், ரவி சாஸ்திரி ஆகியோர்தான்.
கவாஸ்கர் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 168 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா 204/3.
அசாருதீனும், சந்த்ரகாந்த் பண்டிட்டும் இணைந்து ஸ்கோரை விறுவிறுவென்று 251 ரன்களுக்கு உயர்த்த, 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 42 ரன்கள் எடுத்த அசாருதீன் ரே பிரைட் பந்தில் ஆட்டமிழந்தார் இந்தியா 251/4.
அடுத்துதான் இந்தியாவுக்கு பேரடி. கபில்தேவ் 2 பந்துகளில் 1 ரன்னிற்கு பெவிலியன் திரும்பினார். 253/5 . பண்டிட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரவிசாஸ்திரி மேத்யூஸை 2 சிக்சர்கள் அடித்து சென்னை ரசிகர்களை எழுந்து நிற்கவைத்தார். சேத்தன் ஷர்மா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது இந்தியா 331/7 என்று ஆனது. இப்போது டெஸ்ட் போட்டியின் அனைத்து 4 முடிவுகளும் சாத்தியமாயின.
சரியான தருணத்தில் ஷிவ்லால் யாதவ் ஒரு சிக்சரை அடித்து பிறகு ஆட்டமிழந்தார் ஸ்கோர் 344/9 ஆனது.
கடைசி ஓவர் வந்தது மணீந்தர் சிங் களமிறங்கினார். இந்திய வெற்றிக்குத் தேவை 4 ரன்கள்.
கடைசி ஓவரை வீசியவர் கிரெக் மேத்யூஸ்,. பேட்டிங்கில் ரவிசாஸ்திரி உள்ளார். இவர் எப்படியும் மேத்யூஸ் பந்தை இறங்கி வந்து சிக்சருக்குத் தூக்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு, ரசிகர்களின் ஆரவாரக்கூச்சல் எந்த ஒரு வீச்சாளரையும் அச்சுறுத்தும், ஆனால் மேத்யூஸ் அசரவில்லை.
முதலில் இரண்டு ரன்களை எடுத்த சாஸ்திரி, அடுத்த பந்தில் ஆட்டத்தை தோல்வியிலிருந்து காக்கும் முகமாக ஒரு ரன் எடுத்து பெரிய தவறைச் செய்தார்.
மணீந்தர் சிங் பேட்டிங் முனைக்கு வந்து ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்கிடையே மேத்யூஸ் பந்தை எதிர்கொண்டார். பின்னால் சென்று பந்தை கால்காப்பில் வாங்கினார் நடுவர் கையை உயர்த்தினார் ஆட்டம் ஸ்கோர் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அதாவது டை ஆனது.
சாஸ்திரி 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
நடுவர் தோதிவாலாவா, விக்ரம் ராஜுவா என்று தெரியவில்லை. மணீந்தர் சிங்கிற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தது தவறான தீர்ப்பு என்று ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம் புரிந்தார். கடைசியில் கோபமாக வெளியேறினார்.
இரு அணியினரின் நடத்தை...
கடைசி நாளன்று டென்ஷனில் இரு அணியினரின் நடத்தையும் சற்றே மோசமாக இருந்தது. ஆலன் பார்டர் அடிக்கடி நடுவரின் தீர்ப்புகளூக்கு எதிர்ப்பு காட்டி வந்தார். மேத்யூஸ், விக்கெட் கீப்பர் ஜோரர் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் கவனத்தை கலைக்க ரே பிரைட் முயன்றதால் அவர் பிரைட்டை நோக்கி தன் முஷ்டியை உயர்த்தினார். ஜோன்ஸ் இரண்டாவது இன்னின்சில் மணிந்தர் சிங்கிடம் ஆட்டமிழந்தார். ஆனால் மணீந்தர் அவர் ஆட்டமிழந்து செல்லும் போது 40 அடி அவரைத் துரத்திச் சென்று கடும் வசை பாடினார்.
இவ்வளவு சம்பவங்கள் நடந்தாலும் மறக்க முடியாத இந்த செப்டம்பர் 22-ஐ நமக்கு அளித்தது சென்னை சேப்பாக்கம் என்பதை நம் நினைவிலிருந்து அகற்ற முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment