COURTESY : WEBDUNIA TAMIL
செப்டம்பர் 24ஆம் தேதி, 2007ஆம் ஆண்டு அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சோதனையான காலக்கட்டம் சேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். கிரேக் சாப்பல் இந்திய அணியைக் குட்டிச்சுவராக்கிச் சென்ற காலம். 2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம், இலங்கை அணிகளுடன் தோற்று வெளியேறியிருந்தோம்.
திராவிட் அணித் தலைமைப் பொறுப்பு வேண்டாம் என்று கூறிவந்தார். இங்கிலாந்து தொடரில் ஒருவாறாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் திராவிட் தலைமையில் 3-4 என்று தோல்வி தழுவியிருந்தது.
இந்தச்சூழலில்தான் 1983-இல் கபில்தேவ் போல் தோனியின் தலைமை முதன் முதலாக அறிவிக்கப்பட்டு, சச்சின், திராவிட், கும்ளே, லஷ்மண், கங்கூலி இல்லாத ஒரு இளம் அணி தேர்வு செய்யப்பட்டது.
முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அடுத்தடுத்து ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து என்று வெற்றிகளைக் குவித்து இறுதிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஒரு மோசமான சூழ்நிலையில் இந்த தொடருக்கு வந்து போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முதல் போட்டியில் ஸ்கோர் அளவில் போட்டி சமன் ஆக பந்துகளை ஸ்டம்புகள் நோக்கி வீசும் பௌல் அவுட் முறையில் இந்தியா வெற்றிபெற்றது.
அதன் பிறகு மறக்க முடியாத வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக. யுவ்ராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராடின் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராகவும் யுவ்ராஜ் 30 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். அதில் அவர் 14 பந்துகளில் அரைசதம் எடுத்ததுதான் இன்றும் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசத சாதனையாகும்.
இறுதிப்போட்டி
ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் அன்று ரசிகர்கள் கூட்டம் அலை மோத, இரவு நேரம் என்பதால் இந்தியாவிலும் அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி முன் இந்த இறுதிப்போட்டியைக் காண அமர்ந்திருந்தனர்.
தோனி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். சேவாக் காயம் காரணமாக இடம்பெறாதது அன்று ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
அந்தத் தொடர் முழுதும் டாஸ் வென்றால் பேட்டிங் என்ற முடிவில் இருந்தார் தோனி. கம்பீருடன் களமிறங்கியவர் யார் என்றே தெரியவில்லை.
அவர் மொகமது ஆசிப் பந்தை நேராக சிக்சருக்குத்தூக்கவும்தான் ஆஹா! யார் இவர்? என்று கவனிக்கத் துவங்கினர். அவர்தான் யூசுப் பத்தான்.
அதன் பிறகு ஒரு 3 பிறகு ஆசிப்பை மீண்டும் பாயிண்டில் ஒரு பவுண்டரி. ஆஹா! இவரை ஏன் இத்தனை போட்டிகளில் எடுக்கவில்லை என்று அனைவரும் நினைத்திருக்கும் தருணத்தில் அவர் ஆசிப் பந்தை புல் செய்ய முயன்று ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்தார்.
ஆனால் இந்தியா 16 பந்துகளில் 25 ரன்கள் என்ற அதிரடித்துவக்கம் கண்டது. உத்தப்பா களமிறங்கி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு கம்பீரும், யுவ்ராஜும் சேர்ந்தனர். யுவ்ராஜ் சற்றே தடுமாற, கம்பீர் அபாரமாக சில ஷாட்களை ஆஃப் சைடில் ஆடினார். அவருக்கு ஆஃப் சைடில் அன்று ஷோயப் மாலிக்கால் ஃபீல்டர்களை நிறுத்தி மாளவில்லை. அருமையாக ஆடினார் கம்பீர்.
யுவ்ராஜ் 14 ரன்கள் எடுப்பதற்குள் அவர் அரைசதத்தை எட்டினார். 8 ஓவர்களில் இருவரும் 63 ரன்களைச் சேர்த்தனர். இதில் யுவ்ராஜ் 14 ரன்கள்தான் எடுத்தார். அவுட்டும் ஆனார்.
கடைசி 19-வது ஓவரில் யாசர் அராபட் பந்தில் 2 பவுண்டரிகளுடன் ரோஹித் ஷர்மா 13 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் சொகைல் தன்வீர் பந்தை மிட்விக்கெட் திசையில் ஷர்மா சுழற்ற அது கேட்சாகிவிடும் போல் சென்றது. ஆனால் ஹபீஸ் அதனை தட்டி விட்டதால் சிக்சராக மாறியது. இர்பான் பத்தான் 3 ரன்கள் எடுக்க அந்த ஓவரில் இந்தியா 14 ரன்கள் எடுத்தது. ரோஹித் அபாரமாக முடித்து 16 பந்துகளில் 30 ரன்கல் எடுத்து நாட்-அவுட்டாக இருந்தார்.
பாகிஸ்தன் தரப்பில் உமர்குல் மட்டுமே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இந்தியா 157 ரன்கள் எடுத்தது.
பலத்த ஆரவாரங்களுக்கு இடையே பாகிஸ்தான் தன் இன்னிங்ஸைத் துவங்கியது. முதல் ஓவரிலேயே ஆர்.பி.சிங் அபாரமாக வீசி 5-வது பந்தில் ஹஃபீஸை வீழ்த்தினார்.
ஆனால் அந்த விக்கெட்டை மறக்கடிக்குமாறு அடுத்த ஓவரிலேயே ஸ்ரீசாந்த் வந்தார். இம்ரான் நசீர் அவரைப் புரட்டி எடுத்தார்.2 பவுண்டரி இரண்டு சிக்சர்களுடன் அந்த ஓவரில் 21 ரன்களைக் விட்டுக் கொடுத்தார். ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஆனால் ஆர்.பி.சிங்கின் எழும்பி வரும் பந்துகளில் சிக்கல் இருந்தது. இதனால் அடுத்த ஓவரில் கம்ரன் அக்மல் வீழ்ந்தார். பாக்.3 ஓவரகளில் 31/2.
ஸ்ரீசாந்த் மீண்டும் வந்தார் ஆனால் அபாரமாக வீசி மைடன் ஓவர் ஆக்கினார். பாகிஸ்தான் 4 ஓவர்களில் 31/2. ஆனால் அதன்பிறகு 6-வது ஓவரில் இம்ரான் நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் என்ற அதிரடி ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை உத்தப்பா அபாரமாக ரன் அவுட் செய்தார். பாக். 6 ஓவர் 53/3.
14 ஒவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் தேவை. யூனிஸ்கான் மோசமான ஷாட்டிற்கு ஜொகிந்தரிடம் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 9 ஒவர்களில் 65/4 என்று தடுமாறியது.
ஷாகித் அஃப்ரீடியைக் கண்டுதான் அனைவருக்கும் பயம் இருந்தது. ஆனால் அவர் இர்பான் பத்தான் பந்தை, அதாவது அவர் எதிர்கொண்ட முதல் பந்தையே வெளியே அடிக்க முயன்று கொடியேற்றி 0-இல் ஆட்டமிழந்தார். ஷோயப் மாலிக்கைகையும் இர்பான் வெளியேற்ற பாகிஸ்தான் தோல்வியின் முனைக்கு வந்தது. அதாவது 77/6 என்று ஆனது.
அதன் பிறகு யாசிர் அராஃபட்டும், மிஸ்பாவும் இணைந்து 16-வது ஓவர் முடிவில் ஸ்கோரை 104 ரன்களுக்கு உயர்த்த அராஃபட்டை இர்ஃபான் பவுல்டு செய்தார். இருப்பது 4 ஓவர்கள் வெற்றிக்கு தேவையோ 54 ரன்கள். நமக்குத் தேவை 3 விக்கெட்டுகள்.
அப்போதுதான் வழக்கம்போல் பாகிஸ்தான் தனது உத்வேகத்தைக் காட்டியது. மிஸ்பா உல் ஹக் பேட் செய்ய ஹர்பஜன் பந்து வீச் அழைக்கப்பட்டார். 3 சிக்சர்களை மிட்விக்கெட் திசையில் விளாசினார் மிஸ்பா. 17-வது ஓவர் முடிவில் 123/7.
அடுத்த ஓவரை ஸ்ரீசாந்த் வீச முதல் பந்தே தன்வீரின் மட்டையிலிருந்து சிக்சராகச் சென்றது. 5-வது பந்து மீண்டும் தன்வீர் சிக்சர் விளாசினார். ஆனால் கடைசி பந்தில் யார்க்கரை ஆட முடியாமல் தன்வீர் பவுல்டு ஆனார். ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 138/8. தேவை 2 ஓவர்களில் 20 ரன்கள் இருப்பது 2 விக்கெட்டுகள்.
19-வது ஓவர் ஆர்.பி.சிங் வீச நல்ல வேளையாக மிஸ்பா ஸ்ட்ரைக்கில் இல்லை. உமர் குல்தான் இருந்தார். அந்த ஓவரில் 7 ரன்களே கொடுத்ததோடு உமர் குல்லையும் வீழ்த்தினார் ஆர்.பி.சிங், ஆனால் கடைசிபந்தில் ஆசிப் முக்கியமான பவுண்டரியை அடித்தார். 19 ஓவர் பாக்.145/9.
13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை அனுபவமற்ற ஜொகிந்தர் ஷர்மா வீசினார்.முதல் பந்து வைடு, இரண்டாவது பந்தை சுழற்றினார் மிஸ்பா மாட்டவில்லை.
2-வது பந்து ஃபுல்டாஸாக அமைய மிஸ்பா சிக்சருக்குத் தூக்கினார் அதை. 4 பந்துகளில் 6 ரன்களே தேவை என்ற நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை.
அப்போதுதான் மிஸ்பா தான் வாழ்நாள் முழுதும் வருந்திக்கொண்டிருக்கும் பெரும்தவறைச் செய்தார். ஸ்டம்புகளை விடுத்து விக்கெட் கீப்பர் தலைக்குமேல் ஸ்கூப் ஆடினார் மிஸ்பா, பந்து 'மிஸ்'பா... சரியாக அடிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அதனை கேட்ச் பிடிக்க இந்தியா 5 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக இர்பான் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக ஷாகித் அஃப்ரீடி தேர்வு செய்யப்பட்டார்.
கபில்தேவ் தலைமை இந்திய அணி மேற்கிந்திய அணியை வீழ்த்தி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு சர்வதேச அளவில் மீண்டுமொரு மகுடம்!
கோப்பையைப் பெற்ற தோனி அப்போது கூறினார்: "மீதமுள்ள எனது வாழ்நாளில் இதனை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்" என்றார். மேலும் கோப்பையை வென்றிருக்காவிட்டாலும் கூட பெரிய கவலை ஒன்றும் இல்லை என்று அவர் மைக்கில் கூறியது, வித்தியாசமான மனோ நிலை படைத்த ஒரு புதிய தலைமை இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்ததை பறைசாற்றியது.
அன்று முதல் அவர் 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்பட்டார். எப்படி 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக சாம்பியனானது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய பெருமையோ, அதே போல் இந்த செப்டம்பர் 24ஆம் தேதியும் இந்திய கிரிக்கெட் அணியும் ரசிகர்களும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும்.
No comments:
Post a Comment