Saturday, October 16, 2010

அந்நிய முதலீடு வரத்து வளர்ச்சியா? வினையா?

இந்தியாவின் பங்குச் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களால் செய்யப்படும் முதலீடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறதா அல்லது பொருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதித்து வீழ்ச்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி பொருளாதார வட்டாரங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உரையாற்றியுள்ள இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ஆர்.வி. சுப்பா ராவ், அந்நிய முதலீட்டு வரத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறுகிய கால நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைகளிலும் கடன் பத்திரங்களிலும் ஒரு அளவிற்கு அதிகமாக அந்நிய முதலீடு என்பது கவலைக்குறியது என்கிற உலகளாவிய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஒட்டியே சுப்பா ராவின் கருத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அந்நிய முதலீட்டு வரத்து ஒரே நேரத்தில் மிக அதிகமாக வருவதும், ஒரு நேரத்தில் வெளயேறுவதும் நாட்டின் பெருளாதார நிலைத்தன்மையை பாதிக்கும் என்றால், அப்போது (இந்திய மைய வங்கி) தலையிட்டே தீரும். நாங்களும் தலையிடுவோம். ஏற்றுமதி - இறக்குமதி அடிப்படையிலான நடப்பு கணக்கில் உபரி உள்ள பொருளாதார நாடுகளே தலையிடும்போது, இந்தியாவைப் போன்ற பற்றாக்குறை உள்ள நாடு தலையிடாமல் இருக்க முடியாது” என்ற பொருளில் சுப்பா ராவ் பேசியுள்ளார்.

இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) இதுவரை 22 பில்லியன் டாலர்களை (சற்றேறக்குறைய ரூ.10,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியாவின் கடன் பத்திரங்களில் 10 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இந்த அளவிற்கு இவர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யக் காரணம், தங்கள் (வளர்ந்த) நாடுகளில் வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் வட்டியை விட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யக் கூடிய முதலீடுகளில் அதிக வருவாய் கிட்டுகிறது என்பதே.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் இந்த முதலீடு பங்குச சந்தை வர்த்தகத்தை விறுவிறுப்பாக்கினாலும், அது இந்தியாவின் பெருளாதாரத்தை வேறு விதத்தில் பாதிக்கிறது. மிக அதிக அளவிற்கு வரும் முதலீடுகளால் பங்குகளின் விலையேற்றம் தாறுமாறாக உயர்கிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளின் எதிரொலியால் அவர்கள் மிகப் பெரிய அளவிற்கு பங்குகளை விற்கும்போது தாறுமாறாக சரிவையும் ஏற்படுத்துகிறது. இது பங்குச் சந்தையில் ஒரு எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்களை பாதிக்கிறது.

மற்றொரு வகையில், பெரிய அளவிற்கு டாலர் வரத்தால், அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு குறைகிறது. இது நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களை பாதிக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதிக்கு செலாவணி மாற்றில் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் ஆளாவதால், அவர்கள் வேறு நாட்டு சந்தைகளை பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இப்படி ஒரு விதத்தில் சாதகமாகத் தெரியும் அயல் நாட்டு முதலீடுகள், மற்றொரு வகையில் நாட்டின் பெருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதிக்கின்றன. இதனைத் தடுக்கவே, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்நிய முதலீடு வந்தால் அதன் மீது மூலதன வரி விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வழிமுறையை மெக்சிகோ, தென் கொரிய நாடுகள் கடைபிடிக்கின்றன.

இதைத்தான், இந்திய மைய வங்கியின் ஆளுநர் சுப்பாராவ், “நாங்களும் தலையிடுவோம” என்று கூறியுள்ளதன் பொருளாகும்.

ஆனால், சுப்பா ராவின் கருத்திற்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. வாஷிங்டனில் அந்நிய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசுகையில், “அந்நிய முதலீடுகளால் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை, இப்படிப்பட்ட காரணிகளைக் கருத்தில்கொண்டு தடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் குறுகிய காலத்தில் எதிர் வினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.

அந்நிய முதலீட்டு வருகவெள்ளத்தால் “இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஒன்றும் இப்போது இல்லை. முதலீட்டு வருகையும் வெளியேற்றமும் பெரிதாக ஏற்படவும் இல்லை. அது எங்களது சந்தை மன நிலையை பாதிக்கவும் இல்லை. எனவே அந்நிய முதலீட்டு வருகைக்கு உச்சரவரம்பு விதிக்கும் அவசியம் ஏதுமில்லை” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் சந்தைகளில் வளர்ந்த நாடுகளின் நிறுவன முதலீட்டாளர்கள் மேலும் 825 பில்லியன் கோடி (ரூ.37,12,500 கோடி) முதலீடு செய்யவுள்ளனர் என்று சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட முதலீட்டு வருகையால் ஏற்படும் பாதிப்பு என்ன? “வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாயை விட, வளரும் நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாய் அதிகம் என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கி அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவிகின்றன. இது நமது நாணய மதிப்பு மேலாக உந்தித் தள்ளுவதோடு, பெருளாதார நிலைத் தன்மையை சிக்கலாக்குகிறது. அதன் காரணமாக பணவீக்கம், வளர்ச்சி, நாணய கொள்கை ஆகியவற்றை கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று சுப்பா ராவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உருவான வீட்டுக் கடன் நிதி ஆளுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உருவான பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவும், அதனை மிகவும் சார்ந்துள்ள பொருளாதாரங்களான ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றையும் பெருமளவிற்குப் பாதித்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பெருமளவிற்கு நோட்டை அச்சடித்து சுழற்சியில் விடுகின்றன. அவைகள் முதலீடுகளாக வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கிப் பாய்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட முதலீட்டு வரவை வரவேற்கும் ஒரே நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி உள்ளார்!

அந்நிய நிறுவன முதலீடுகள் மேலும் வருவதற்கு ஏதுவாக, இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை இரு மடங்களாக உயர்த்தி 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய வழியேற்படுத்தியுள்ளார். இந்திய நாட்டின் பெரு நிறுவனங்களின் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் உச்சவரம்பை இதே அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு அந்நிய முதலீட்டை கிரகிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அதனை அனுமதிக்க வேண்டும். அந்த வரையறையை தாண்டும்போது கட்டுப்பாட்டு அவசியமானது என்று நிதி ஆலோசனை அமைப்புகள் கூறுகின்றன.

இதனையெல்லாம் உணர்ந்தவராக உள்ள மைய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கையுடன் பேசுகிறார். ஆனால், நமது நாட்டின் நிதியமைச்சரோ, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய முதலீடுகளால் மட்டுமே சாத்தியமாகும் என்பதுபோல் பேசி வருகிறார்.

அமெரிக்காவீன் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லீமென் பிரதர்ஸ் சரிந்து விழுந்ததையடுத்து உருவான சங்கிலித் தொடர் வினைகளால் அந்நாட்டு பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு பெரும் ‘மாற்றம்’ நிகழ்ந்தால் மட்டுமே நமது நாட்டு அரசும் விழித்துக்கொள்ளுமோ என்னவோ?

No comments:

Post a Comment